Search
Wednesday 20 February 2019
  • :
  • :

விஜய் என்கிற வெற்றி நாயகன்!!

ரஜினி என்ற மந்திரப் பெயருக்குப் பிறகு, தமிழ் சினிமா உலகம் மயங்கிக் கிடக்கிற இன்னொரு பெயர் “விஜய்”. ஆண், பெண் பாகுபாடில்லாமல்.. சிறுவர், பெரியவர் வயது வித்தியாசமில்லாமல்.. ஒரு நடிகனின் நாடித்துடிப்பாக ரசிகர் பட்டாளம் இருக்கிறதென்றால் அது விஜய்க்குத் தான்.

நேற்று இளைய தளபதியாக இருந்து, இன்று தளபதியாக ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனின் நெஞ்சிலும் வெற்றிச் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் விஜய்யின் இயற்பெயர் கூட “வெற்றி” என்பதே.

தந்தை ஒரு புகழ்பெற்ற இயக்குநர் என்ற போதிலும் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து “அண்ணாமலை” பட வசனத்தை நடித்துக் காண்பித்து நடிக்க வந்தவரை விமர்சனம் என்ற பெயரில் குத்திக் கிழித்தது அன்றைய பத்திரிக்கை உலகம். “நாளைய தீர்ப்பு” பட தோல்வி தந்த வலியை விட, அப்படத்திற்கான விமர்சனங்களே விஜய்க்கு வேதனையளித்தாக அவரே பல முறை சொல்லி இருக்கிறார்.

இதன் பிறகு விஜய்காந்த், சந்திரசேகரனிடம் கொண்ட நட்புக்காக நடித்துத் தந்த “செந்தூரபாண்டி” திரைப்படம் விஜயை ஓரளவிற்கு “சி செண்டர்” கொண்டு சேர்த்தது என்றாலும், பெரிய வெற்றியைத் தரவில்லை. மனம் தளராமல் அடுத்தடுத்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்திலேயே நடித்து வந்தவருக்கு, “பூவே உனக்காக” திரைப்படம் தான் நடிகன் என்கிற அந்தஸ்த்தை பெற்றுத் தருகிறது. அதோடு படமும் பயங்கர ஹிட்.

“வெற்றி தோல்வி வந்து வந்து போகும்.. முயற்சி மட்டும் தான் நிலையானது” என்பது விஜய் ஒரு முறை மேடையில் பேசும் போது சொன்னது. உண்மையில் பார்க்கப்போனால் அது அப்படியே அவருடன் தொடர்புடையது.

தொடர் தோல்விகளால் முடங்கி விடாமல், ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் தன்னை புதிதாக உருவாக்கிக் கொள்ளத் தெரிந்த வித்தைக்காரராக விஜய் இருந்தார்.

“பூவே உனக்காக” வெற்றிக்குப் பிறகு “லவ் டுடே”, “ஒன்ஸ்மோர்”, “நேருக்கு நேர்” என தடுமாறாமல் பயணிக்கத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் “காதலுக்கு மரியாதை” மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது.

இந்த மாபெரும் வெற்றியையும், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெருவதற்கு அவருக்கு 16 படங்கள் தேவைப்பட்டது. “காதலுக்கு மரியாதை” படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் பிடித்துக் கொண்டு “துள்ளாத மனமும் துள்ளும்”, “குஷி”, “ஃப்ரண்ட்ஸ்” போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தையும், இடத்தையும் பிடித்துக் கொள்கிறார்.

இந்த சமயத்தில் தான் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகத் தொடங்கியிருந்தது.

“அடுத்தவங்க தொட்ட உயரத்தை இலக்கா வச்சுக்கதீங்க.. நீங்க தொட்ட உயரத்தை அடுத்தவங்களுக்கு இலக்கா நிரணயம் செய்ங்க” இது விஜய் அவரது ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரை. ரஜினி – கமல் இருவரின் சாம்ராஜ்யத்தின் நடுவே ஒரு குட்டி அரசனாக ராஜாங்கம் நடத்தி வந்த விஜய், ஒட்டுமொத்த தமிழ் சினிமா வட்டாரமே அதிரும் படியாக உச்சியேறி வெற்றிக்கொடி நாட்டியது “திருமலை” மூலமாகத்தான்.

“திருமலை” சாதனையை “கில்லி” திரைப்படத்தின் வாயிலாக உடைத்ததோடு மட்டுமல்லாமல், இந்தப் ப்டத்திலிருந்து தான் அடுத்தவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கும் இடத்தையும் அடைந்தார் விஜய். அதிர வைக்கும் படியாக சண்டை போடுவது, புழுதி பறக்க நடனமாடுவது, குழைந்து குழைந்து காமெடி செய்வது என அக்மார்க் கமெர்ஷியல் பேக்காஜாக மாறிய விஜய் அடுத்து தொட்டது அனைத்துமே அதிரிபுதிரி ஹிட்டுகள் தான். “திருப்பாச்சி”, “சிவகாசி” என வரிசையாக சரவெடி கொளுத்த அதிர்ந்தது கோலிவுட்.

இந்த சமயத்தில் தான் 2007-ஆம் ஆண்டு வெளியான “போக்கிரி” திரைப்படம் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் எனும் பெருமையை விஜய்க்கு பெற்றுத் தந்தது. தெலுங்கு ரீமேக்காக இருந்தாலும், இந்தப் படத்தில் விஜய்யின் நடிப்பும், மேனரிசமும் பெரிதாக பேசப்பட்டது. அடுத்து சில படங்கள் சராசரியாக அமைந்தாலும், “காவலன்”, “நண்பன்” ஆகிய படங்களின் மூலம் விட்ட இடத்தை மீண்டும் நெருங்கி வந்தார்.

மிகச்சரியாக 2012-ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் வெளியான “துப்பாக்கி” திரைப்படம் தான், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என எல்லோரையும் பேச வைத்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் தான் விஜய்க்கு 100 கோடிகளுக்கு மேல் வசூலைக் கொட்டித் தந்த முதல் திரைப்படம். அதன் பிறகு “கத்தி”, “தெறி”, “மெர்சல்” என தொட்டதெல்லாமே லேண்ட் மார்க் வெற்றிகள் தான்.

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை விஜய் வைப்பது தான் மற்ற நடிகர்களுக்கெல்லாம் டார்கெட். இந்த சாம்ராஜ்யத்தை கட்டமைக்க விஜய்க்கு 26 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

எவ்வளவு பெரிய தோல்வியானாலும் துவண்டு போகாத உழைப்பு, எவ்வளவு பெரிய வெற்றியானாலும் தலைக்கு ஏற்றிக் கொள்ளாத நிதானம், எவ்வளவு பெரிய பிரச்சனையானாலும் வார்த்தைகளைக் கொட்டி விடாத கண்ணியம் இவையனைத்தும் தான் விஜய் என்கிற தனி மனிதனை, நடிகனை கோடான கோடி ரசிகர்களின் நெஞ்சில் அண்ணனாக, தளபதியாக, தலைவனாக ஏற்றி வைத்திருக்கிறது.