Search
Tuesday 16 October 2018
  • :
  • :

விழித்திரு விமர்சனம்!

விழித்திரு. 2012 இல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சூழ்நிலைகளையும் இடையூறுகளையும் கடந்து வெளிவந்திருக்கிறது. இவ்வளவு தடைக்கற்களைத் தாண்டி வந்தபின்னும் பாருங்கள், விழித்திரு மழையிடம் சிக்கிக்கொண்டது துரதிர்ஷ்டவசம் தான். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக ஒரு படத்தை எடுத்தே ஆகவேண்டும் என தீர்க்கமான ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, படைப்பாளியாக நின்ற மீரா கதிரவனின் நம்பிக்கைக்கு முதலில் வாழ்த்துகள்.

“அவள் பெயர் தமிழரசி” விமர்சன ரீதியில் நல்ல பெயரைத் தந்திருந்தாலும் இரண்டாவது படத்திற்கு மிகப்பெரிய இடைவெளி மீரா கதிரவனுக்கு. ஒரு இரவில் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் நான்கு மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் கதை. கையாள்வதற்கு சற்றே சிரமமான திரைக்கதையை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரின் தனிப்பட்ட கதையையும் சுருக்கமாக சொல்லியிருப்பது படத்தை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது.

ஒரு காதல் திருமணத்தை சாதிவெறி கொண்ட அரசியல்வாதி ஒருவர் பிரித்துவைத்து அந்த காதலனையும், பெண்ணின் தந்தையையும் கொன்றுவிட்டு நாடகமாடியதை பத்திரிக்கையாளர் சரண் கண்டுபிடித்து ஆதாரங்கள் சேகரித்திரிப்பதாக படம் ஆரம்பிக்கிறது. சரணை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர் ஒத்துவராத காரணத்தால் அவரை முன்விட்டு பின்னால் வந்து சுட்டு விடுகிறார்கள் அந்த அரசியல்வாதி+போலீஸ் கூட்டணி. அந்த இடத்தில், பர்ஸ் காணாமல் போன காரணத்தால் பணத்திற்காக ஆக்டிங் ட்ரைவராக வந்த கிருஷ்ணா சரணைக் குண்டடிபட்ட நிலையிலேயே காப்பாற்றி கொண்டு போகிறார். வழியிலேயே சரண் இறந்துவிட, அவரிடம் இருக்கிற ஆதாரத்திற்காகவும், இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியாக கிருஷ்ணா இருப்பதால் அவரையும் கொல்வதற்காக அரசியல்வாதியின் அடியாள் போலீஸ் துரத்துகிறது.

திருடப்போன இடத்தில் மணக்கோலத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் தன்ஷிகாவை, விதார்த் தம்பி ராமையாவிடம் இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறார். முதலிரவிற்கு வீரிய மாத்திரை வாங்கப் போன நேரத்தில் காணாமல் போன தன்ஷிகாவைத் தேடி துப்பாக்கியுடன் தேடுகிறார், தம்பி ராமையா.

தொலைந்து போன நாய்க்குட்டியைத் தேடி பார்வையற்ற வெங்கட் பிரபுவும், அவரது மகளாகிய “தெய்வத் திருமகள்” சாராவும் அலைகிறார்கள். அப்போது சாரா வழிதவறி வெங்கட் பிரபுவை பிரிந்து ஒரு குழந்தை கடத்தும் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். நாய்க்குட்டியைத் தேட வந்த இடத்தில் மகளையும் தொலைத்துவிட்டு பார்வையற்ற வெங்கட் பிரபு தடுமாறி நிற்கிறார்.

பணத்தால் எதையும் வாங்கலாம் என்று நினைக்கும் பணக்கார இளைஞன் ஒருவன், பிறந்த நாள் பார்ட்டிக்கு நண்பர்களுடன் செல்லும் இடத்தில் சந்திக்கும் ஒரு அழகியின் மனதைக் கவர்வதற்காக அவளுடன் சென்னை வரை இரவுப் பயணத்திற்கு காரில் புறப்படுகிறான். வழியில் கார் பழுதாக, பர்ஸ் தொலைந்து செயவதறியாது நிற்கிறான்.

இந்த நான்கு கதைகளையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து, நெகிழ்ச்சியான ஒரு முடிவைத் தந்திருக்கிறார் இயக்குனர். படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங். துரத்தல் கதை என்பதோடு இல்லாமல் ஒரே இரவில் பயணிக்கும் கதை என்பதால் இவை மூன்றுமே நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறது. படத்தில் தேவையில்லாத ஃப்ளஸ்பேக்குகளைத் தவிர்த்திருப்பது புத்திசாலித்தனம் தான். உதாரணத்திற்கு வெங்கட் பிரபுவின் மனைவி இறந்ததாகட்டும், கிருஷ்ணாவின் குடும்ப சூழலை சொல்லியதாகட்டும், தம்பி ராமையாவின் மனைவி பற்றி சொல்லியதாகட்டும்  ஃப்ளாஸ்பேக்குகளை ஒரு சில வசனங்களிலும், ஒரு ஃபோன் காலை வைத்தும், ஒரு புகைப்படத்தை வைத்தும் சொல்லியது சிறப்பு.

கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, விதார்த், தம்பி ராமையா என அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளார்கள். வெங்கட் பிரபு நிறைய படங்களில் நடிக்கலாம். பாடல்களில், வைக்கோம் விஜயலட்சுமியின் குரலில் “ ஆழி அலை நீரும்” பாடல் நெகிழ வைத்தது நிஜமாகவே. பிசாசு படத்தின் “நதி போகும் கூழாங்கல்” பாடலை நினைவூட்டியது. இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கத்திற்கு பாராட்டுகள்.

கிருஷ்ணாவை அடிக்கடி போலீஸ் சுற்றி வளைத்தும், சும்மா சும்மா அவர் தப்பித்து போவது சற்று சலிப்பைத் தந்தது. வெங்கட் பிரபு-சாரா கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் கூறப்பட்டிருந்தால் நிச்சயம் நெஞ்சுக்கு மிக நெருக்கமான படமாக அமைந்திருக்கும். டி.ராஜேந்தர் வந்து ஆடிப்போகும் அந்த பாடல் தேவையா? எனத் தொன்றியது. எல்லோரும் தப்பித்துப்போக வாய்ப்பிருந்தும் இறுதியில் கிருஷ்ணா மட்டும் மாட்டிக்கொள்வதும் கொஞ்சம் நெருடலாய் இருந்தது.

படத்தில் வெங்கட் பிரபுவின் பெயர் “திலீபன்”.. கிருஷ்ணாவின் பெயர் “முத்துக்குமார்” என்ற குறியீடுகளிலும், ஆரம்ப காட்சியில் பேசப்படும் கொலை வழக்கில் “இளவரசன் – திவ்யா”வை நினைவு படுத்தியதிலும் மீரா கதிரவன் என்னும் சமூக அக்கறை கொண்ட மனிதர் தெரிகிறார்.

“நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்யாத வரை மட்டுமே அவர் நமக்கு அந்நியமானவர்.. இவையிரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டாலும் அவர் நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிடுகிறார்” என்ற நீதியை இறுதிக் காட்சியின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் “விழித்திரு” படம்  நிச்சயமாய்ப் பார்க்க வேண்டிய படமே!