Search
Wednesday 20 March 2019
  • :
  • :
Latest Update

நவீன நாடகங்களின் வழியே கலகக்குரல் எழுப்பும் தஞ்சை மைந்தன்!!

தமிழின் அழகே அதனுள் பொதிந்திருக்கும் தொன்மையான இலக்கியங்களும், கலை வடிவங்களும் தான். மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத பெருமையாக இயல், இசை, நாடகம் என மூன்று வெவ்வேறு வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு, உலகின் மூத்த மொழியாக பெருமை கொள்ளச் செய்வதாக இருக்கும் தமிழ் மொழி, உள்ளபடியே தன் இயல்பைத் தொலைத்து வெகு நாட்களாகிறது. “முத்தமிழ்” என்பதற்கான அடையாளத்தை துறந்து, கிட்டத்தட்ட தமிழ்க் கலைகள் அனைத்தும் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.

சினிமா, தொலைக்காட்சி இதற்குள் சுருங்கிக் கிடக்கிற.. இவை அடையாளப்படுத்துவது தான் “கலை” என்று நம்புகிற தலைமுறையைக் கொண்ட இந்த அவசர உலகத்திலும் சிலர் தமிழ்க் கலைகளை வளர்ப்பதற்காக, காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கலைஞர்களுள் ஒருவர் தான், தஞ்சாவூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர் விஜயகுமார். நவீன நாடகங்களின் மூலமாக குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் இயற்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் விஜயகுமாரும், அவரது “உதிரி நாடக நிலம்” குழுவினரும்.

இயற்கையோடு இனைந்து வாழ வேண்டும். அந்த இயற்கையையும் வாழ வைக்க வேண்டும் என்ற கருத்தியலை பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மிக அற்புதமாகப் பதிய வைக்கிறார் விஜயகுமார். “மனிதன் இயற்கையின் ஓர் அங்கம். ஆனால், இயற்கையைத் தன் வசப்படுத்த அலைபவர்கள் இறுதியாக இயற்கையிடம் தோற்றுப் போகிறார்கள்” என்று நமக்குள் இருக்கும் எண்ணங்களும், சிந்தனைகளுமே அவரிடமிருந்து உரைநடையாகத் தெறிக்கின்றன.

தமிழகம் முழுவதும் பயணம் செய்து, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரால் இயற்கையை அழிக்க ஒருபோதும் நாம் துணை போகக்கூடாது என்பதை வலியுறுத்தி தனது குழுவினரோடு நவீன பாணி நாடகத்தை நிகழ்த்தி வருகிறார். “உதிரி நாடக நிலம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்.

மதுரை திருநகரில் உலக மரபு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற பண்டிதமணி கதிரேசனார் நூல் வெளியீட்டு விழாவில், விஜயகுமார் ‘உதிரி’ என்ற தலைப்பில் நவீன தனி உடல் நாடகத்தை நிகழ்த்தினார். “தொழில்நுட்பங்களைப் பார்த்துப் பார்த்து, ஏங்கி ஏங்கி இயந்திரங்களோடு மட்டுமே வாழப் பழகிவிட்டோம். இருந்தும் ஆபத்தை அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறது மிஞ்சியிருக்கும் இயற்கை. ஆனாலும், கண்டுகொள்வதே இல்லை இயற்கையை” என்று தனது சிவந்த கண்களால் பார்வையாளர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்கிறார். அவரது ஒவ்வொரு அசைவும் நமது மரபுகளின் மகத்துவம் உணர்த்துகின்றன.

நவீன நாடகங்களின் மேல் காதல் கொண்டு கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கியும், இயக்கியும் வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் கடந்த 2000-ம் ஆண்டு நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறைதான் தனது நாடக வாழ்க்கையின் துவக்கம் என்று கூறும் விஜயகுமார், நிஜ நாடகக் கலைஞரும், நடிகருமான மு.ராமசாமியால் பயிற்றுவிக்கப்பட்டதைப் பெருமையோடு பகிர்கிறார். நவீன நாடகக்கலையின் தந்தையாகப் போற்றப்படும் பேராசிரியர் ராமானுஜமே தன்னுடைய குரு என்கிறார்.

“போருக்குப் பின் இலங்கை” என்ற தலைப்பில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் “உதிரி” நாடகம் நிகழ்த்தப்பட்டு, 130 நாடுகளின் பிரதிநிதிகள் தன்னைப் பாராட்டியதை மிகப் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார் விஜயகுமார்.

“நாடி”, “வண்ணத்துப் பூச்சிகளின் ஆறு”, “கோமாளிகளின் குதிரை”, “கனவுக் குதிரை”, “ராஜா என்கிற குதிரை”, “1001 நெல்லும் காக்கை அக்காவும்”, “மீளல்”, “பூவையர்”, “நமக்கு நிலங்கள் இருந்தபோது” (அம்பையின் சிறுகதை), “இறந்த நதிகளின் ஆவிகள்” (மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்), “சேதி” என 13-க்கும் மேற்பட்ட நவீன நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தும் வருகிறார்.

 

உடல்மொழி, ஒளி-ஒலி அமைப்போடு கூடிய நவீன பாணி தனி உடல் நாடகம் என்றாலும், விஜயகுமாரின் ஒவ்வொரு அசைவும் நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகின்றன. 40 நிமிட நாடகத்தில், உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு கருத்தியலை நமக்குள் காட்சியாகவே கொண்டு வருகிறது. “தன்னொழுக்கம் இல்லாமல் திரிவதே நாகரிகம் என்று சொல்லிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. உணரப்படும் மொழிபேசிகள் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடமிருந்து விலகிப் புதைகிறோம்” என்று விஜயகுமார் எழுப்பும் ஓங்காரக் குரல் அரங்கில் இருப்பவர்களை ஒருகணம் அதிரச் செய்கிறது.

“வறுமையின் கீதங்களிலிருந்து ஒலிக்குரல் எழுப்பும் உதிரி நான். இயற்கையைத் தொலைத்த உடல்கள் மானிடப் பிண்டங்களாய்த் திரிகின்றன”’ என்று நிறைவு செய்துவிட்டு, பார்வையாளர்கள் ஒவ்வொருவர் கையிலும் கம்பு, கேழ்வரகு தானியங்களைப் படையலாக வழங்கிவிட்டு, தனி உடல் நவீன நாடகமான “உதிரி”யை நிறைவு செய்கிறார். கரவொலி விண்ணைப் பிளக்கிறது. அதன் ஊடாக நாம் தொலைத்துவிட்ட நமது மரபு வாழ்க்கையை நினைக்க வைத்து பெருமூச்சுவிடவும் வைக்கிறார்.