Search
Saturday 19 January 2019
  • :
  • :

டிக்..டிக்..டிக் – விமர்சனம்!!

முதலில் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுக்கு பெரிய வாழ்த்துக்களும், பாராட்டுகளும். “நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை”, “மிருதன்” என வரிசையாக வெரைட்டி சினிமா ரசிகர்களுக்கு தீனி போட்டவர், இந்த முறை “டிக்..டிக்..டிக்” திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்களை விண்வெளிக்குக் கூட்டிப் போயிருக்கிறார். இதற்கு முந்தைய இவரின் படத்திலிருந்து விலகி இன்னும் பிரம்மாண்டம் கூட்டி, ஒரு மாபெரும் விஷுவல் ட்ரீட் வைத்திருக்கிறார்.

சுமார் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட விண்கல் ஒன்று ஆகாயத்திலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இன்னும் 7 நாட்களில் அது கடலில் விழும் என்றும், அப்படி விழுந்தால் தோராயமாக 4 கோடி மக்கள் இறக்க நேரிடும் என்கிற அபாயத்தையும் கணக்கிடுகிறார்கள். அந்த விண்கல்லை குறிப்பிட்ட எல்லையில் வைத்து தகர்த்தால் மட்டுமே பெரும் அழிவை தடுக்க முடியும் என்கிற சூழல். அப்படி அந்த விண்கல்லை தகர்ப்பதற்கான ஆயுதம் இந்திய ராணுவத்திடம் இல்லாத நிலையில், சீன ராணுவத்திடம் இருக்கும் அந்த ஆயுதத்தை திருட முடிவு செய்யப்படுகிறது. அந்த ஆயுதம் மிகவும் பாதுக்காப்பாக விண்வெளியில் உள்ள சீன ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அதைத் திருடுவதற்காக ஒரு குழுவிற்கு பயிற்சி அளிக்கிறது. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக் மற்றும் அர்ஜுன் ஆகியோர் அடங்கிய குழுவை வின்வெளிக்கு ரகசியமாக அனுப்புகிறது இந்தியா. இந்த சூழலில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்துக் கொண்டு, அந்த ஆயுதத்தை தங்களுக்கு திருடித் தராவிட்டால் மகனைக் கொன்று விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

திட்டமிட்டபடி சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து அந்த ஆயுதத்தை திருடினார்களா?, ஜெயம் ரவி மகனைக் காப்பாற்றினாரா? 4 கோடி மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டதா? என “டிக்..டிக்..டிக்” என நொடிக்கு நொடி விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்கிற விளம்பரத்தோடு வந்திருக்கும் இப்படம், எஸ்.எஸ்.மூர்த்தி-யின் கலை வடிவமைப்பாலும்.. “AJAX MEDIA TECH” நிறுவனத்தின் VFX பணிகளாலும் அந்தப் பெருமைக்கு தகுதியானதாக மாறியிருக்கிறது.

வழக்கமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே இவ்வகையான கதைகளைப் பார்த்து மகிழ்ந்திருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, முதல் முறையாக நேரடித் தமிழ் திரைப்படத்தின் வாயிலாக புதியதோர் அனுபவத்தைத் தந்திருக்கிறார்கள்.

படத்தின் கலை, VFX பணிகளுக்கு நிகராக வேலை செய்திருக்கும் மற்றொரு நபர் இசையமைப்பாளர் டி.இமான். இது அவருடைய நூறாவது படமாக வேறு அமைந்து போனது மற்றுமொரு சிறப்பு. ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிறச் செய்யும் படியாக ஒவ்வொரு காட்சியிலும் இவரது BGM பிரித்தெடுக்கிறது. கார்க்கியின் வரிகளில் “குறும்பா” உயிர் வருடும் பாச மெலடி.

விண்கலத்திற்கு உள்ளே நிகழும் காட்சிகள், அந்தரத்தில் மிதப்பது போன்ற காட்சிகளில் எல்லாம் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷும் மிதந்து மிதந்து வேலை செய்திருப்பார் போல. லைட்டிங் மற்றும் ஆங்கிள் எல்லாவற்றிலுமே அவருடைய மெனக்கெடல் அபாரமானதாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தனது நேர்த்தியான எடிட்டிங் மூலம் படத்திற்கு வேறு வடிவம் தந்திருக்கிறார்.

ஜெயம் ரவிக்கு இது கம்பேக் படம். நினைத்த மாதிரியே அவருக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நிவேதா பெத்துராஜ் முரட்டுத் தனமான அழகோடு இருக்கிறார், மிக சீரியசான காட்சிகளில் கூட இவரது அழகு கண்ணை விட்டு அகல மறுக்கிறது. வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்கள். மேலும் ஜெய பிரகாஷ், சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜிஸ் ஆகியோரது நடிப்பும் பாரட்டும் படியாகவே அமைந்திருக்கிறது.

மீண்டும் ஒருமுறை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனை பாராட்டியே ஆக வேண்டும். எடுத்த முயற்சியை வெற்றிகரமாக முடித்துக் காட்டியிருக்கிறார். தொழிற்நுட்ப ரீதியாக சவால் மிகுந்த இப்படத்தின் அத்தனை தொழிற்நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து இவர் கொண்டு வந்திருக்கும் அவுட்புட் நிச்சயம் பாராட்டுதலுக்குரியதே.

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த மாதிரி இயக்குநர் ஷங்கரை படமெடுக்கச் சொன்னால், எப்படியும் ஒரு ஐநூறு கோடி காலி நிச்சயமாக!!