Search
Tuesday 16 October 2018
  • :
  • :

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்!

இந்தத் தலைமுறையினரில் பலருக்குக் “குற்றப் பரம்பரை சட்டம்” குறித்தோ அதன் வரலாற்றுப் பின்னணி குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக “குற்றப் பரம்பரை” குறித்து ஒரு சிறிய அறிமுகம்,

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும் 1876 இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கு இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர் கடைசியாகக் குற்றப் பரம்பரை சட்டம் (1924 ஆம் ஆண்டின் VI வது திருத்தம்) என்று இந்தியா முழுவதும் அமுலாகியது.

19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாகப் பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாகக் குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட தேசிய மொழிவாரி இனங்களின் கூட்டுக்கலவையாக விளங்கிய இந்தியா அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி முடிவில் தக்கீ (Thuggee/Thug) போன்ற குறிப்பிட்ட சில இன மக்கள் குற்றங்களின் முக்கிய காரணியாக இருப்பதை கண்டுபிடித்தனர். தக்கீ இன மக்கள் நாடோடி கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர். வியாபாரிகள், அதிலும் குறிப்பாக நெடுந்தொலைவு நடந்தும், குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே இவர்களின் முக்கிய இலக்காயினர். கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர் இருப்பதால், பெரும்பாலும் கொலையும் களவின் ஒரு பகுதியாகவே போனது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தக்கீயர் கொன்றிருப்பதாகக் கின்னஸ் புத்தகம் கூறுகிறது.

பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகிக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த இவர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை சராசரி மக்களை விட்டு வேறுபட்டு நின்றது. சீக்கிய திருடர்கள், இசுலாமிய திருடர்கள் ஆகியோர் இருந்தபோதும் இந்துத் திருடர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

கொள்ளையை ஒழிக்கும் அளவுக்குப் பொறுமையோ, அவகாசமோ, ஆர்வமோ இல்லாத ஆங்கிலேயர்கள் கொள்ளையர்களை ஒழிக்க முடிவுசெய்தனர். வில்லியம் ஸ்லீமன் (William Sleeman)தலைமையிலான “Thuggee and Dacoity Department” ஆயிரக்கணக்கான தக்கீ இனத்தாரை தூக்கிலிட்டும், நாடு கடத்தியும், வாழ்நாள் சிறை தண்டனை விதித்தும் வங்காளத்தை சுற்றி வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தனர்.

சரி, இதற்கும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? படத்தின் அடித்தளமே குற்றப் பரம்பரை இனத்தவர்களில் ஆங்கிலேயர்களால் அடையாளப் படடுத்தப்பட்ட “பவேரியா” என்னும் கொள்ளைக் கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் படமே!

வெறும் போலீஸ் ஹிஸ்டரியை வைத்துக் கொண்டு மட்டுமே கதை செய்யாமல், வரலாற்றின் உண்மைப் பக்கங்களைத் தேடிப் படித்து அவற்றை முடிந்தளவிற்குக் கதைக்குள் பொருத்தியும் விறுவிறுப்பான ஒரு திரைக்கதையை அமைத்ததற்க்காக இயக்குனர் வினோத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அவரது தேடலும், மெனக்கெடலும் படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உணர முடிகிறது. வசனங்களில் கூர்மையாக அரசு மற்றும் காவல் துறையினரின் பொறுப்பற்றத் தனங்களை எதார்த்தம் மீறாமல் பதிவு செய்த வகையில் படம் நமக்கு மிக நெருக்கமான ஒன்றாகி விடுகிறது.

இத்தனை வேகமான திரைக்கதையில், இவ்வளவு அழகாகவும் அழுத்தமாகவும் ஒரு காதலை சொல்ல முடியுமா? அதையும் அற்புதமாக செய்திருக்கிறார் வினோத். எந்த ஒரு காதல் காட்சியும் படத்திற்கு இது தேவையா? என்று கேட்குமளவிற்கு இல்லை. படத்தின் உயிரோட்டத்திற்கு இந்த காதல் காட்சிகள் பெரிதும் உதவியிருக்கின்றன.

பொதுவாகவே பெரிய பட்ஜெட் படங்களிலும், பெரிய ஹீரோக்களின் படங்களிலும் வில்லன்கள் ஹீரோவிற்கென்றே நேர்ந்துவிட்டவர்கள் போலவே வந்து அடிவாங்கி செத்துப்போவார்கள். பற்றாக்குறைக்கு “அவன் ஓடி ஒளியிறவன் இல்ல, தேடி அடிக்குறவன்” என்று ஹீரோவிற்கு பாராட்டு பத்திரம் வேறு வாசித்து கடுப்பேற்றுவார்கள். இந்த சூழலில் தான் இப்படி ஒரு கொடூரமான வில்லனைக் காட்டி மிரள வைத்திருக்கிறார்கள். இறுதிக்காட்சி வரை வில்லன் மீது ஒரு வகையான பயம் இருந்து கொண்டே இருக்கிறது, கூடவே கோபமும் தான். இதற்கு முன் பல படங்களில் அபிமன்யூ சிங் வில்லனாக வந்திருந்தாலும், தீரனில் மிரட்டியிருக்கிறார் மனிதர்.

கார்த்தி, அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம் தைரியமாக. எவ்வளவு நாளாயிற்று கார்த்தியின் இந்த அபார நடிப்பைப் பார்த்து?. காதல் காட்சிகளில் குழைவதாகட்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் இறுக்கமான முகத்தோடும் உடம்போடும் எகிறி அடிப்பதாகட்டும் எந்த இடத்திலும் நடிப்பென்று உணர முடியாத வகையில் அப்படி ஒரு நடிப்பு. வாழ்நாள் படமாக “தீரனை” உங்கள் அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள் கார்த்தி.

ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் தான் “நடித்திருக்கிறார்” உண்மையிலேயே. வெறும் பாடலுக்கு வரும் கதாநாயகியாக இல்லாமல் படத்தின் ஜீவன் ஒளிந்திருக்கும் கதாபாத்திரத்தை ஏற்று அழகாக நடித்து நினைவில் நிற்கிறார். இதேபோல் போஸ் வெங்கட் தனது முதிர்ந்த நடிப்பின் மூலம் படத்தின் வலுவான கதாபாத்திரத்தை மிக இலகுவாக தூக்கி சுமக்கிறார். போஸ் வெங்கட் நிஜமாகவே தமிழ் சினிமா சரியாக அங்கீகரிக்காத ஒரு கலைஞன். தீரனில் இருந்து அவரது பயணம் புதியதாக அமைய வேண்டும்.

படத்தின் நான்கு தூண்கள் இசை, ஒளிப்பதிவு, கலை, சண்டைக் காட்சிகள் தான். ஜிப்ரானுக்கு அறம், தீரன் என அடுத்தடுத்து பெயர் சொல்லும் இரண்டு படங்கள். ஜிப்ரான் இந்த படத்திற்கு உயிர் கொடுப்பதில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார். வடமாநிலக் காட்சிகளில் காண்பிக்கும் இடங்களை எப்படித்தான் சல்லடை போட்டு அள்ளினார்கள் என்றே யூகிக்க முடியவில்லை. ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் உயரங்களை அடைவார் நிச்சயமாக. 

ஒரு உண்மைச் சம்பவத்தைப் படமாக்கும் பொழுது, அது ஆவணப்படமாகிப் போகக் கூடிய அத்தனை சாத்தியக் கூறுகள் இருந்தும், பதறப் பதற ஒரு ஆக்‌ஷன் படமாக மாற்றிக்காட்டியதில் இயக்குனர் வினோத் கொடிநாட்டியிருக்கிறார். இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் நம்பிக்கை தரும் இயக்குனர்கள் வரிசையில் கம்பீரமாக அமர்கிறார் வினோத்! அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அதிகாரவர்க்கத்தின் முகத்தில் பளாரென்று வைக்குமளவிற்கு எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் வைத்து முத்திரை பதிக்கிறார்.

படத்தை உண்மையான காவல் அதிகரிகளுக்கு சமர்ப்பிப்பதாக “எண்டு கார்டு” போட்டுவிட்டு, இந்தக் கதையில் உண்மையாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விருதோ, பதவி உயர்வோ வழங்கப்படவில்லை என்று கூறி முடித்ததாகட்டும்.. அதேபோல் குற்றப் பரம்பரை உருவாவதற்குக் காரணமான வரலாற்று சம்பவத்திற்கு பசுமாட்டு ரத்தம் பௌலி சிலையின் மேல் பட்டதால் வந்த தீட்டுதான் காரணம் என்ற பிற்போக்குத் தனத்தையும் பதிவு செய்து தீரனில் மிக நுணுக்கமாக அரசியல் பேசிய கூர்மைக்கு வாழ்த்துகள்.. வாழ்த்துகள்!