Search
Friday 15 December 2017
  • :
  • :

“குற்றப்பரம்பரை”களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்? “தீரன் அதிகாரம் ஒன்று” படம் எழுப்பும் கேள்விகள்.

ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும், “தீரன் அதிகாரம் ஒன்று”.

ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும்… இந்த வாக்கியம் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் இயக்குநருக்கு மிகச்சரியாக பொருந்தும். அடுத்து அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீரனுக்கும் மிகச்சரியாக பொருந்தும்.

அத்தனை புள்ளி விவரங்கள், தேடல்கள், தகவல்கள்… என மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரலாற்றை ஆய்வு செய்து இவ்வளவு விவரங்கள் கொடுப்பதில் வினோத் கைதேர்ந்தவராயிருக்கிறார். உதாரணத்திற்கு இரத்தக்கறை படிந்த கத்தியை காவலர்கள் எடுக்க வேண்டிய முறை.

கதாநாயகன் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் பற்றி பாராட்டவேண்டியதைத்தாண்டி இந்த படம் பற்றி நிறைய பேசலாம். விவாதிக்கலாம்.

ரசிகனாக, மக்களாக ஒரு படத்தை கொண்டாடுவதும் திட்டுவதும் மட்டுமே நம் வேலை அல்ல. அதையும் தாண்டி அந்த படங்கள் உருவாக்கும் அரசியலை விவாதங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

இந்த படத்தில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நிறைய விசயங்கள் உண்டு.

1. இந்தியா முழுக்க குற்றப்பரம்பரை இனக்குழுக்களாக / சாதிகளாக உருவாக்கப்பட்ட மக்களைப்பற்றிய விவாதங்கள். அவர்களை அப்படி உருவாக்கிய குற்றவாளிகள்.

2. மன்னராட்சி காலமாக இருந்தாலும் மக்களாட்சி காலமாக இருந்தாலும் ஒரே ஒரு பசுமாடு ஒரு இனத்தையே காவு வாங்கி திருடர்களாக, இரக்கமற்ற வன்முறையில் இறங்கும் அளவுக்கு சிதைப்பதற்கு பின்னால் உள்ள அதிகார அரசியல், பண்பாட்டு அரசியல், சாதி அரசியல், புனித அரசியல், மத அரசியல், கலாச்சார அரசியல்…

3. ஒரு இனத்தை விளிம்புநிலைக்கு தள்ளி பொருளாதார வாழ்விடங்களை விட்டு துரத்தி நீண்ட காலமாக காட்டுக்குள் வாழ நிர்ப்பந்தித்தால் இந்த பொது சமூகத்தின் காலடி தொட்டு கழுவவா செய்வார்கள் அவர்கள்?

4. வடநாட்டு லாரி கொள்ளையர்கள் ஒன்றரை வருடங்களில் நிகழ்த்திய கொள்ளைகளில் நிகழ்ந்த கொலைகள் வெறும் 18 மட்டுமே. கொள்ளையர்களின் கொடுமையாக தாக்குதலில் காயம் பட்டு பாதிக்கப்பட்டவர்கள் 60 சொச்சம் பேர் மட்டுமே. அதை ஒரு காவல்துறை அதிகாரி சவாலாக எடுத்துக்கொண்டு தன்னோடு ஒரு அணியை அழைத்துக்கொண்டு பல மாதங்களாக வடநாடுகளில் குடும்பத்தை பிரிந்து பட்டினியாகக்கூட கிடந்து அந்த கொள்ளையர்களை பிடிக்கிறார்கள். நிஜமாகவே பாரட்டப்படவேண்டியவர்கள் தான். ஆனால் இந்த 18 உயிர்கள் மட்டும் தான் உயிர்களா? இந்த வழக்கை சவாலாக எடுத்த காவல் அதிகாரி போல ஒரு அதிகாரி வேறு வழக்குகளை எடுப்பாரா?

5. உதாரணத்திற்கு சாதிய வன்கொடுமைகளில் தமிழகத்தில் மட்டும் இதுவரை எத்தனை உயிர்ப்பலிகள் நடந்திருக்கிறது? நடந்து கொண்டிருக்கிறது? மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் பிரச்சினையில் மட்டும் 17 பேர் இறந்திருக்கிறார்கள். யாராவது ஒரு காவல்துறை அதிகாரி அதற்காக இப்படி படை அமைத்து நீதிப்பயணம் மேற்கொள்வாரா? இதுபோல இன்றும் தொடரும் தொடர்கதைகள் ஆயிரம் உண்டு.

6. அண்ணன் எவிடென்ஸ் கதிரிடம் கேட்டால், தமிழகத்தில் நடந்த உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை பற்றிய மிக நீண்ட புள்ளி விவரங்களையும் பட்டியலை தருவார்.
இது தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கான விமர்சனம் இல்லை. எனவே விமர்சனம் என்ற அடிப்படையில் எடுத்துக்கொள்ளாதீர்கள். படம் எழுப்பிய சில கேள்விகளைப்பற்றி ஒட்டி எழுதப்பட்ட ஒரு கட்டுரை.

இயக்குநர் H.வினோத் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு, அவர் இன்னும் நிறைய நிறைய சிறப்பான படங்களைத்தருவார். அவரது உழைப்பிற்கும் அவரது குழுவினரின் உழைப்பிற்கும் நிறைவான வாழ்த்துகள். தொடர்ந்து சிறப்பான படங்களை தயாரிப்பதன் மூலமாக தமிழ் சினிமாவின் சுவாசத்தில் புத்துணர்ச்சியூட்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் இருவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

– முருகன் மந்திரம்

Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299