Search
Tuesday 18 September 2018
  • :
  • :

ரசிகனுக்கு என்ன செய்யப் போகிறார்கள் தியேட்டர்க்காரர்கள்?

எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அந்த திரையரங்கம் இருந்தது. தும்பை நிறத்தில் அகலமாய் விரிந்திருந்தத் திரைக்கு அருகில் குளிர்ந்த மணலோடும், கொஞ்சம் பின்னால் மரத்தாலான நீண்ட பெஞ்சுகளோடும், அதற்கும் பின்னால் சிவப்பு வண்ணம் பூசிய நாற்காலிகளோடும், தகரத் தட்டுகளால் ஆன கூரையோடும் ஆன அதன் அமைப்பு இப்போது நினைக்கையிலும் நெஞ்சினில் ஈரத்தோடு அப்படியே தான் இருக்கிறது.

அங்கே தான் சினிமா அறிமுகமானது. அங்கேதான் ஆதர்ஷ நாயகர்கள் அறிமுகமானார்கள். மாதத்திற்கு மூன்றோ அல்லது நான்கோ என்று அளவாகவே வெளியாகிறத் திரைப்படங்களுக்குத் தெரு மொத்தமும் மாட்டு வண்டி பூட்டிக்கொண்டு திருவிழாவிற்குப் போவதுபோல் போன அந்தக் காலம் நிஜமாகவே ஒரு பொற்காலம். (குறிப்பு : மாட்டுவண்டி நிறுத்துவதற்கு கட்டணமெல்லாம் அப்போது இல்லை!)

இடைவேளையின் போது வாங்கிக் கொறித்த பதார்த்தங்களின் சுவையை அந்த திரையரங்கின் சூழல் தேன் போலவோ அமுதம் போலவோ மாற்றியிருந்தது என்று தாராளமாய் மிகைப்படுத்திக் கூறலாம், விலை அப்படி!

அப்படியே அன்றிலிருந்து ஒரு பதினைந்து ஆண்டுகளைக் கண்ணை மூடிக் கடந்து வந்தால் திரையரங்குகளை வெளியிலிருந்து பார்த்துவிட்டு கடந்து போகிற சூழலில் தான் இன்றைய திரையரங்குகள் இருக்கின்றன, கட்டணம் அப்படி!

நூறு நாட்கள், ஐம்பது நாட்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து இன்று ஒரு வாரம் தாக்குபிடித்தாலே போதும், வெற்றி என்றாகி விட்டதெல்லாம் காரணம் என்னவாய் இருக்குமென்று திரைத்துறையினருக்கே யோசிக்க நேரமில்லை. தொழிற்நுட்ப வளர்ச்சி எந்தளவிற்கு சாதகமாக இருக்கிறதோ அதே அளவிற்கு பாதகமும் செய்வதாலேயே தமிழ் சினிமா இப்போது திக்குமுக்காடி நிற்கிறது.

இணையத் திருட்டு ஒருபக்கம், அடுத்த நொடி தாறுமாறு விமர்சகர்கள் ஒரு பக்கமென்று ஒரு படத்தை அழித்து ஒழிப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் மிக மிக மலிவாகிவிட்ட இந்த நேரத்தில் இதோ 150+GST+புக்கிங் சார்ஜஸ் அடங்கிய கட்டணம் போதாதென்று தமிழக அரசு விதித்திருக்கிற கேளிக்கை வரியின் காரணமாக உயரும் கட்டணங்கள் எல்லாம் மக்களை திரையரங்கு பக்கமே அண்ட விடாமல் தான் செய்யுமே ஒழிய வேரொன்றும் நடக்கப் போவதில்லை. ஏற்கனவே பாதி மக்கள் தரமில்லாத திரையரங்குகள், பார்க்கிங் கட்டணம், கேண்டீன் பொருட்களின் விலை இவற்றிற்குப் பயந்துகொண்டே திரையரங்கு பக்கம் வராமலேயேப் போய்விட்டார்கள்.

சாமானிய நடுத்தர வர்க்க மக்கள் எல்லாம் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்து வருகிற இந்த காலத்தில் சினிமா என்பது ஆடம்பர செலவு என்றெண்ணக் கூடிய நிலை வந்து விடாமல் அவர்களைத் திரையரங்கின் பக்கம் அழைத்துவரும் மிகவும் சாமர்த்தியமான வேலையைச் செய்ய வேண்டியது திரைத்துறையினரின் இன்றியமையாத கடமையாகும்.

இதோ இப்போது விஷால் வெளியிட்டிருக்கும் அறிவிப்பிற்கு தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மோதல் போக்கு எங்கே போய் முடியுமென்று தெரியாத சூழலில் தமிழ் சினிமா கலங்கி நிற்கிறது தீபாவளி வந்துவிட்ட இந்த நேரத்தில்.

சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றிணைந்து அரசிற்கு நிலைமையைத் தெளிவாக புரியவைத்து நிரந்தரமான, நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்யாவிட்டால் கிராமப் புறங்களில் இருந்து காணாமல் போன மற்றும் கல்யாண மண்டபமாகிப் போன பலநூறுத் திரையங்குகளைப் போலவே இன்றிருக்கிற இந்த மல்டிப்ளஸ் திரையரங்குகள் நாளை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாகவோ, மால்களாகவோ மாற்றப்படுகிற சோகமே நிகழக்கூடும்.

என்னதான் குளிர்ந்த காற்று, குஷன் சீட்டென்று அத்தனை செளகரியங்களும் இருந்தாலும், இந்த கட்டணங்களே மிகப்பெரிய அசெளகரியமாக இருக்கின்றது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

இதையெல்லாம் மீறியும் திரையரங்கிற்கு வந்து காசு கொடுத்துப் படம் பார்த்துச் செல்கிற ரசிகனுக்கு என்ன செய்யப் போகிறது இந்த சினிமாத்துறை???

அப்புறம் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன், இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் ”பதினைந்து வருடங்களுக்கு முன்னர்” என்று அறிமுகப்படுத்திய எங்கள் பக்கத்து ஊர் திரையரங்கம் இப்போது நெல் குடோனாக இருக்கிறது!!