Search
Tuesday 16 October 2018
  • :
  • :

தளபதியை வளர்த்தெடுக்கும் பிரச்சனைகள்!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கிற நடிகர் விஜயின் படங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இருக்கிறத் ”தீராதக் காதல்” தொடர்ந்து கொண்டே இருக்கிறது “மெர்சல்” வரை..நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜயின் படங்கள் பிரச்சனைகளை சந்திப்பதென்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது, எப்படியெனில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் படம் வெளியாகிவிட்டால் பலர் ஆச்சர்யப்பட்டு பேசுமளவிற்கு ஆகிவிட்டது…

“படம் எடுப்பதில் இருக்கிற சிரமத்தை விட அதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவிட வேண்டும் என்பதே பெரிய சிரமமான ஒன்றாக இருக்கிறது” என்று விஜயையே பேச வைத்துவிட்டார்கள் நம்மவர்கள்…அழகிய தமிழ்மகனில் ஆரம்பித்த இந்த சர்ச்சைகள் மெர்சல் வரை விஜயை விடாமல் துரத்து துரத்தென்று துரத்திக் கொண்டே இருக்கிறது..

**அழகிய தமிழ் மகன் படத்தின் 25 சதவீதம் முடிந்திருந்த நிலையில் படப்பிடிப்பிற்கு நான்கு வாரங்கள் தடை விதித்தது எம்.எஃப்.ராஜா என்ற தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கின் காரணமாக..

**”சுறா” திரைப்படம் தோல்வியைத் தழுவியதால், நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் “காவலன்” படத்தை வெளியிட மறுத்து போர்க்கொடி உயர்த்தினார்கள்.. அதுமட்டுமில்லாமல் காவலன் திரைப்படத்திற்கு உரிமம் கேட்டு “கோகுலம் சிட் ஃபண்ட்ஸ்” எனும் நிறுவனம் வழக்கு தொடுத்தது…

**”துப்பாக்கி” தலைப்புக்காக வழக்கை சந்தித்தது.. கள்ளத்துப்பாக்கி என்னும் படக்குழுவினர் படத்தை தடைசெய்யக் கோரியது ஒருபக்கமும் இசுலாமிய அமைப்புகள் தங்களை தவறாக சித்தரித்துள்ளதாகவும் வழக்கை சந்தித்தது…

**”தலைவா” அரசியல் ரீதியாக விஜய் படுத்தியெடுக்கப்பட்ட ஒரு படம்..”Time To Lead” என்கிற கேப்சனை வைத்த பாவத்திற்காக விஜய் பட்டபாடு நாடே அறிந்தது தான்… தமிழகத்தில் படம் வெளியாவதற்கு முன்னமே திருட்டு விசிடியில் வெளிவந்த கொடுமையும் தலைவாவுக்குத் தான் நடந்தது…

**துப்பாக்கி படத்திற்கு அடுத்து இரண்டாவது முறையாக முருகதாஸுடன் விஜய் கைகோ*ர்த்த “கத்தி” யையும் விடவில்லை நம்மாட்கள், முழுக்கதையும் என்னுடையது என்று ஒருவர் நீதிமன்றத்திற்குப் போக படாதபாடுபட்டுப் போனார்கள் விஜயும், முருகதாஸும்…

**வரிசையாக இப்படி சிக்கித் தவித்த விஜய் படங்களில் “புலி” ஒருபடி மேலே போய் அவரது வீட்டில் வருமான வரி சோதனை அளவிற்கு போய் நின்றது.. வழக்கமாக படத்தில் பேசுகிற அரசியல் வசனங்களுக்காகவே பழிவாங்கப்படுகிறார் என்று வெளியே பேசிக் கொண்டதும் நடந்தது… அதோடு இல்லாமல் தயாரிப்பு தரப்பு பிரச்சனைகளுக்காக படம் காலதாமதமாகவே வெளியானது…

**அட்லீயும் விஜயும் முதல் முறையாக இணைந்த “தெறி”யும் தப்பவில்லை தடங்கலிடம் இருந்து.. செங்கல்பட்டு பகுதியில் 60 திரையரங்குகளுக்கு மேலாக படம் தாமதமாகவே வெளியானது.. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்குமே பிரச்சனையாக இருந்தாலும் இதுவும் விஜயின் பிரச்சனையாகவேப் பார்க்கப்பட்டது..

** இப்போது ” மெர்சலும்” தப்பவில்லை.. அட்லியோடு இரண்டாவது முறையாக விஜய் இணைந்திருக்கிற விஜய்க்கு புதிய சிக்கலாக படத்தின் தலைப்பிற்கு உரிமை கொண்டாடி ஒருவர் வழக்கு தொடுக்க, நீதிமன்றமும் அக்டோபர் ஆறாம் தேதி வரை “மெர்சல்” என்கிற தலைப்பைப் பயன்படுத்த தடை விதித்து பின் தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் வழங்கியிருக்கிறது…

** கேளிக்கை வரி பிரச்சனை சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கும் இடையே நிலவும் மோதல் போக்கு கூட மிகச்சரியாக ”மெர்சல்” படத்தின் தீபாவளி ரிலீசை பாதிக்குமோ என்கிற அளவிற்கு பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை.

** இந்த சிக்கல்கள் போதாதென்று விலங்குகள் நல வாரியமும் குடைச்சல் தந்துகொண்டிருக்கிறது. தடையில்லா சான்றிதல் பெறவில்லை என்று சென்சார் தருவதில் சிக்கல் இன்னும் தீராமல், ரசிகர்களையும், படக்குழுவினரையும் பதட்டத்திலேயே வைத்திருக்கிறார்கள்.

இவ்வளவு பிரச்சனைகளையும் சந்திக்கிற விஜய், இதுவரை நிலை தடுமாறாமல் இருப்பதே விஜய்க்கு தளபதி என்னும் சிம்மாசனத்தைத் தந்துள்ளது. மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தான் நினைவுக்கு வருகிறது,
“நம்மைச் சுற்றி எவ்வளவு எதிர்மறையானவர்கள் கத்திக் கொண்டிருந்தாலும், அத்தனை பேரையும் புறந்தள்ளி விட்டு நம் வேலையை பார்த்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் கடந்து போவதே சிறந்தது” என்று அவர் பேசியது எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்று அவரது வளர்ச்சியை அருகில் இருந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

எது எப்படியோ எங்கேயும், யாரிடமும் தேவையில்லாமல் அதிகம் பேசாத விஜயை, இந்த சின்னச்சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடுத்த கட்டத்திற்குச் தூக்கிச் செல்லும் வேலையை தான் செய்து கொண்டிருக்கின்றன.