Search
Wednesday 20 March 2019
  • :
  • :
Latest Update

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்!!

மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக, “சர்கார்” ஃபர்ஸ்ட்லுக் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்ட போதிலும் பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை. வழக்கமாக தமிழ் சினிமாக்களில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வருவது இயல்பானது தான் என்றாலும், சில முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்று வரும்போது பிரச்சனையாகி விடுகிறது.

அதிலும் நடிகர் விஜய் நடித்த படங்கள் வரிசையாக சர்ச்சைகளை சந்தித்தே வெளிவருகின்றன. கடைசியாக வெளியான “மெர்சல்” திரைப்படம் பட்டபாடு தமிழகமே அறிந்த ஒன்று தான். அதே போல, இப்போது பெயர் வெளியிட்ட அன்றே சிக்கிக் கொண்டு நிற்கிறது அவரது “சர்கார்”. இந்த முறை சர்ச்சையைக் கிளப்பி இருப்பது பா.ம.க தலைவர் மருத்துவர். ராமதாஸின் மகனும், எம்.பி-யுமான மருத்துவர். அன்புமணி ராமதாஸ்.

இதனால் ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், பா.ம.க தொண்டர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டது. இந்த சர்ச்சை தொடர்பாக தொடர்ப்பட்ட வழக்கில், அந்த படத்தை நீக்குமாறு நீதிமன்றம் படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட படக்குழுவினரும் அந்தப் படத்தை நீக்கினர். சரி, பிரச்சனை இத்துடன் ஓய்ந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னொரு நபர், ரூபாய் 30 கோடி கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, “சர்கார்” தர்ப்பிற்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

இப்படியாக பிரச்சனை போய்க்கொண்டிருக்க, திடீரென உள்ளே புகுந்து நிலவரத்தை கலவரமாக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகர் சிம்புவும், அவரது தந்தை டி.ராஜேந்தரும்.

இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி.ஆர்,

“புகைப் பிடிப்பது தவறுதான். ஆனால், இங்கு யார் தான் புகைக்காமல் இருக்கிறார்கள்?. அது ஏன் விஜய் அப்படி நடிக்கும் போது மட்டும் பிரச்சனை ஆக்குகிறார்கள். அவர் தமிழன் என்பதாலா?. அவரை வைத்து விளம்பரம் தேடப் பார்க்கிறார்களா?. திரை உலகிற்காக நான் வக்காலத்து வாங்குவேன். ராமதாஸ், அன்புமணி இருவருமே எனக்கு நண்பர்கள் தான். ஆனால், ஏன் இவர்கள் சினிமாக் காரர்களை மட்டுமே டார்கெட் செய்கிறார்கள்?” என்று ஆவேசமாக கேள்விகளை அடுக்கினார்.

இது முடிந்த சில நேரத்திற்குள்ளேயே அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு, மருத்துவர் அன்புமணியை விவாதத்திற்கு அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,

“சினிமாவை வைத்து உண்டாக்கப்படும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. “பாபா” தொடங்கி “சர்கார்” வரை புகைப்பிடிப்பது தொடர்பாக சர்ச்சைகள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. இது குறித்து தமிழ் சினிமாவின் பிரதிநிதியாக அன்புமணி ராமதாஸ் அவர்களோடு நேரடியாக பொது மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன்” என பேசியிருக்கிறார்.

இதனால் “சர்கார்” சர்ச்சை இன்னும் தீவிரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடிகர் விஜய் இதுகுறித்து இதுவரை வாயே திறக்கவில்லை என்பது தான் ஹைலைட்!!