Search
Monday 10 December 2018
  • :
  • :

பூஜையுடன் தொடங்கியது #SK14!!

“வேலைக்காரன்” திரைப்படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருக்கிறார்.

“சீமராஜா” படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து, ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி “இன்று நேற்று நாளை” படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு இப்போது தொடங்கியிருக்கிறது. இந்தத் தகவலை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“24 ஏஎம் ஸ்டுடியோஸ்” சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஹுல் பிரீத் சிங் நடிக்கிறார். கமெடி நடிகர்கள் யோகி பாபு, இஷா கோபிகர் மற்றும் பானு பிரியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றுகிறார்.

பல கட்டமாக நடக்கும் படப்பிடிப்பை சீக்கிரம் முடித்து பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிவகார்த்திகேயன் தற்போது அருண்ராஜா காமராஜா இயக்கும் “கனா” திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.