Search
Saturday 21 July 2018
  • :
  • :
Latest Update

நம்பிக்கை நாயகன் எஸ்.கே!!

சினிமா ஒரு மாய உலகம். இங்கு வெற்றி தோல்வியை கணிப்பதென்பது காலங்காலமாக இதற்குள் கோட்டை கட்டி வாழும் ஜாம்பாவன்களுக்கே சிம்ம சொப்பனம்தான். கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிறைந்திருக்கும் மனிதத் திரளில் பாதி, இந்தக் கணக்குகளுடன் தான் தங்கள் எதிர்காலத்தை முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது இன்றும்.

எதுவுமே இல்லாமல் வந்து சிகரத்தில் இருப்பவர்களையும், எல்லாம் இருந்தவர்களாக இருந்தும் எதையுமே சாதிக்க முடியாமல் போனவர்களையும், இந்த இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு சிக்கி சீரழிந்தவர்களையும் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டே தன்னை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திக் கொண்டே இருக்கிறது இந்த சினிமா உலகம்.

ஒட்டுமொத்த திரையுலகமுமே ஆச்சர்யமும், பொறாமையும் கொள்ளுமளவிற்குக் காலம் ஒரு நடிகனைத் தந்துகொண்டே இருக்கும். அப்படி இந்தக் கணத்தில் சினிமாவில் இருக்கிற ஒவ்வொருவருமே வாய் பிளந்து பார்க்கக் கூடிய ஒரு நடிகன் தான் சிவகார்த்திகேயன்.

பிறந்து வளர்ந்து படித்து முடிக்கும் வரை அவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ சினிமாவுடனான தொடர்பு என்பது படம் பார்ப்பது மட்டும் தான். எம்பிஏ படிப்பதற்காக சென்னை வரும் போது தான் அவரது நட்பு வட்டமே கொஞ்சம் பெரிதாக ஆரம்பித்திருக்கிறது. தந்தையின் இழப்பிலிருந்து தன்னை மீட்டெடுக்க ஆரம்பித்ததும் அந்த சமயத்தில் தான். அத்தனை நாள் கட்டமைத்துக் கொண்டிருந்த தனிமை வலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக தன்னை சுற்றி இருந்த நண்பர்களை சிரிக்க வைத்திருக்கிறார் சிவா.

அங்கு விழுந்த “மிமிக்ரி” விதை, நண்பர்களின் உந்துதலோடு “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியின் வெற்றியாளாராக மாற்றுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த முகமாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு பட்டி தொட்டியெங்கும் குடும்ப உறுப்பினராகவே மற்றிப்போகிறார் சிவா. ஒரு “கம்ப்ளீட் எண்டெர்டெயினர்” என்ன செய்ய வேண்டும்?, “பெருசு முதல் சிறுசு வரை” பேதமில்லாமல் குஷிப்படுத்த வேண்டும். அதை அச்சுப் பிசகாமல் செய்து, தன்னை ஒரு முழுமையான கலைஞனாக்கிக் கொள்கிறார்.

ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி, ஹோஸ்டிங்காக இருந்தாலும் சரி சிவாவின் ஸ்டைல் எப்போதுமே தனி தான். கொஞ்சலும், குறும்பும், அழகு தமிழும் தன் எதிரிலிருப்பவர் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் நடத்துகிற தன்மையும் சிவாவை எல்லோருமே நினைவில் வைத்துக் கொள்ளும்படி செய்தது.

அப்படித் தான் பத்து மேடையோடு பதினொன்றாவது மேடையாக “வாகை சூட வா” பட விழாவின் மேடையிலும் ஏறினார் சிவா. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சிவாவையே பார்த்துக் கொண்டிருந்தார் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாண்டிராஜ். அந்த மேடியிலிருந்தே சிவாவை தனது கதாநாயனாக்குவது என முடிவு செய்கிறார். அப்படித் தான் சிவாவின் கோலிவுட் எண்ட்ரி அமைகிறது. “மெரினா” படத்திற்கென்று எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் டிவியில் பார்த்த அதே குறும்புக்கார இளைஞனாகவே வந்து பலரின் நெஞ்சங்களில் நிறைந்து கொள்கிறார்.

அந்த தொடக்கத்திலிருந்து இன்று வரையிலுமான சிவாவின் வளர்ச்சியென்பது ஒரு “லாங் டிப்-பிளாக்” போட்டு தொடரும் வீடியோ பொன்றது தான்.
2008-லிருந்து 2012 வரை ஒரு காலகட்டமாகவும், 2012 முதல் இப்போது வரை சிவாவின் வாழ்க்கையை அணுகினால் அவரது வளர்ச்சியின் வேகம் என்ன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

எல்லோரைப் போலவுமே சிவா அதிர்ஷ்டக்காரர், மச்சக்காரர் எபது போல ஒரு வார்த்தையில் அவரது வளர்ச்சியை எளிதாகக் கடப்பதென்பது அவரது உழைப்பை மலினமாக்கும் ஒன்று தான். சிவா ஒரு நம்பிக்கை முகம், தமிழ் சினிமாவின் வாசல் கதவுகளில் தவமிருக்கும் பல இளைஞர்களுக்கும்.

“வாய்ப்பிற்க்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குங்கள். எந்த நேரத்திலும் கிடைக்கும் வாய்ப்பை முழுதாய் பயன்படுத்துமளவிற்கு உங்களைத் தகுதியாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த சமரசமும் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருங்கள், வெற்றி தானாய்க் கிடைக்கும்!”. இது தான் சிவகார்த்திகேயன் என்கிற இளைஞன் எஸ்.கே என்கிற சாதனை நாயகனாக மாறி நிற்பதற்கான தத்துவம்.

எல்லா தனி மனிதனைப் போலவும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு, வாழ்ந்துகொண்டு தன்னைத் தானே உயரத்திற்கு எடுத்துக் கொண்டு போகும் தைரியமும், துணிச்சலும், திறமையும் யாருக்குமே வாய்க்காதது அதிர்ஷ்டத்தைப் போலவே. இவை அனைத்துமே சிவாவிற்கு வாய்த்தது எஸ்கே ஆகி விட்டார். உங்களால் இவையாவும் சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் நீங்களும் நாளை “எஸ்.கே” ஆகலாம்!!