Search
Wednesday 23 January 2019
  • :
  • :

அகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்!!

 

கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது “தமிழ்ப்படம்” வெளியாகி. அப்போதைய டிரெண்டிற்கு சிவா – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் வந்த அந்தப் படம் இருக்கிற அத்தனை தமிழ் சினிமா ஃபார்முலாக்களையும் கிழித்துத் தொங்கவிட்டது. மாஸ் ஹீரோ முதல் காமெடி ஆக்டர் வரை அத்தனை பேரையும் உறித்து உப்பு தடவினார்கள் அந்தப் படத்தில். முழுக்க முழுக்க “ஸ்பூஃப் ஜானர்” வகையிலான அந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததால் சிலிர்த்துப் போய் சில்லரைகளை வீசி எறிந்தார்கள்.

நூற்றாண்டு கால தமிழ் சினிமா தந்த கான்செப்டுகளின் உதவியோடு அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. சிவா-வும் சில படங்களில் பிஸியானார். சி.எஸ்.அமுதன் “ரெண்டாவது படம்” எடுத்து நொந்து நூடூல்ஸாகி, மூன்றாவது படமாக ரொம்ப லேட்டாக “தமிழ்ப்படம் 2” எடுக்கக் கிளம்பினார். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்விக்குறி தான். ஆனால் அள்ள அள்ள குறையாமல் ஸ்பூஃப் கான்செப்டுகளை அளிப்பதில் தமிழ் சினிமாவிற்கு நிகர் தமிழ் சினிமாவே இருக்கும் போது அவருக்கு என்ன கவலை? (தெலுங்கு சினிமாவெல்லாம் இதில் வேற லெவல்).

படம் அறிவித்த நாள் முதலாகவே வெறித்தனமாக வச்சு செய்யத் தொடங்கியவர்கள், ரிலீஸ் நெருங்க நெருங்க பேய்த்தனமாக இறங்கி அடித்தார்கள். டீசர், டிரைலர், போஸ்டர், பாடல் என அத்தனையிலும் அடாவடித்தனமாக அலும்பு செய்தார்கள். ஆனால், யாருக்குமே அதனால் கோபம் வரவில்லை, மாறாக சம்பந்தப்பட்டவர்களே உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

சரி படம் எப்படி? வொர்த்தா? தேறுமா? என்று பார்த்தால், உள்ளபடியே முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் சற்று தொங்கலாகவே இருக்கிறது. காரணம் என்னவென்று கேட்டால், முதல் பாதியில் இருந்த இயல்பும், திரைக்கதையும் தான். இரண்டாம் பாகத்தில், இது இரண்டும் இல்லாமல் போனதாலேயே நம்மை கட்டிப் போடாமல் போய்விடுகிறது.

ஆனால், வழக்கம் போல அத்தனை படங்களையும் “டமால் டுமீல்” என போட்டுத் தள்ளி இருக்கிறார்கள். கண்ணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது. ஐஷ்வர்யா மேனன் அழகு தேவதையாக வருகிறார். சிவாவின் வழக்கமான ஸ்டைலில் வந்து விழும் ஒன் லைன் டயலாக்குகள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன. கமெடி நடிகர் சதீஸ்? இதில் கொடூரமான வில்லனாக? வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்?. சிவாவுடன் போலீஸ் அதிகாரியாக வரும் சேத்தன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

அரசியல்வாதிகள் முதல் அறிமுக நடிகர்கள் வரை ஒருவரைக் கூட விடாமல் நொறுக்கித் தள்ளியிருக்கும் சி.எஸ்.அமுதன் அண்ட் கோ, இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் எக்குத்தப்பாக இருந்திருக்கும். குறிப்பாக வேதாளம், விவேகம், ரெமோ போன்ற படங்களை கலாய்த்துத் தள்ளி இருக்கிறார்கள். அரசியல்வாதிகளில் நம் ஆளுங்கட்சித் தரப்பு வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறது.

எதிர்பார்ப்பைக் குறைத்துகொண்டு போனால், தமிழ்ப்படம் 2 நிச்சயம் எல்லோரையும் சந்தோசப்படுத்தும்.