Search
Monday 16 July 2018
  • :
  • :

மெர்சலுக்கு ஆதரவாக தணிக்கைக் குழுவை வறுத்தெடுத்தத் தயாரிப்பாளர்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள மெர்சலுக்கு ஆதரவாக விலங்குகள் நல வாரியத்தையும், தணிக்கைக் குழுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய சுரேஷ் காமாட்சி. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது,

“மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது. மத்தியில் விலங்குகள் நல வாரியம், இங்குள்ள அவர்களின் ஆட்சியும் இணைந்து இளைய தளபதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த உலகத்தின் செதுக்கலே மனிதனுக்கு விலங்கும், விலங்குகளுக்கு மனிதனும் பயன்படும்படியான ஒரு சங்கிலித் தொடர் அமைப்பு!

உண்டு வாழ்வதிலும், உணவை உற்பத்தி பண்ணுவதிலும் இவர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்து வருகிறோம் பல ஆயிரம் ஆண்டுகளாக. ஆனால் நேற்று முளைத்த விலங்குகள் நல வாரியம் பல கோடிகளில் எடுக்கப்பட்ட ‘மெர்சல்’ திரைப்படத்தை இப்போது வரைக்கும் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது. காரணம் விஜய் ஒரு பக்கா தமிழன்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிற்கிறார். அனிதா வீட்டில் போய் ஆறுதல் சொல்கிறார். இதெல்லாம் செய்தால் நாங்க மட்டும் சும்மா இருந்துவிடுவோமா? எங்கள் அதிகார பலத்தைக் காட்டமாட்டோமா? என குடைச்சல் கொடுக்கிறது இந்த வாரியம் மூலமாக. இந்த வாரியத்திற்கு குறிக்கோள் விலங்குகள் வதைக்கப்படுவது முக்கியமல்ல. அதை யார் வதைக்கிறார்கள் என்பதே முக்கியம்.

விலங்குகள் வதை என்பது என்ன தெரியுமா? ஒருவன் ஒரு நாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டானே, அதுதான் வதை. எங்கள் சினிமாவிற்கு நீங்கள் செய்யும் கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. சிகரெட் விற்பார்கள். சரக்கு கோடிகோடியாய் விற்பார்கள். ஆனால் சினிமாவில் அதைக் காட்டிவிடக்கூடாது. கீழே எழுத்துப் போட வேண்டும். அல்லது எடுக்கவே கூடாது.

விலங்குகளை பாதுகாக்க இந்த வாரியங்கள் சினிமாவைக் கூர்ந்து நோக்கியதைத் தவிர, தமிழர்களின் ஜல்லிக்கட்டுக்கெதிராக போர் தொடுத்ததைத் தவிர வேறு உருப்படியாக என்ன செய்திருக்கிறது?

வெயில் நேரங்களில் தாகத்தால் தவிக்கும் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ தண்ணீர்கூட வைப்பதில்லை. சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறந்துபோகும் ஆயிரக்கணக்கான நாய்கள், மான்கள் மற்ற விலங்குகளைப் பாதுகாக்க என்ன செய்தது?

சினிமாவில் எந்த விலங்கையோ பறவைகளையோ பயன்படுத்தினால் உடன் ஒரு மருத்துவரை வைத்து அந்த உயிருக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்ற சான்றிதழ் வரை வாங்கித் தருகிறோம். பின் எப்படி வதைக்கப் பட்டதாய் படம் பார்க்கும்போது முடிவெடுக்கிறீர்கள்?

விஜய் மிக நன்னடத்தை உள்ளவர். மேடைகளில் கவனமாக வார்த்தைகளைக் கையாள்பவர். தானுண்டு தன் சினிமா உண்டு என்று இருப்பவர். தன் இனத்தின் மீது எல்லோருக்கும் இருக்கும் அக்கறை அவருக்கும் உண்டு. யார் யாரெல்லாமோ முதல்வர் கனவோடு கம்பு சுத்தவிட்டு வேடிக்கைப் பார்க்கும் அதிகாரம் ஆளப் போகிறான் தமிழன் என்று பாட்டு போட்டவுடனே உங்களுக்கு குருதி கொதிக்கிறது..

அன்று ஆண்ட அம்மா ரஜினி அவர்களை போக்குவரத்து நெரிசலில் நிற்க வைத்தார். கோபம் கொண்ட ரஜினி இறங்கி கால்நடையாய் போயஸ் போனார். அடுத்த ஆட்சி மாற்றத்தில் அவர் குரல் பெரும்பங்கு வகித்தது.

எங்கள் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய் பலகோடி மக்கள் கொண்ட நடிகர். அவர் படங்களில் அவரை நிம்மதியாக நடிக்கவிட்டு மக்களை மகிழ்வாக வைத்திருக்க உதவுங்கள். இந்த சின்ன புள்ளைக சார் குச்சியெடுத்து ஒளிச்சி வச்சிட்டான் சார்ன்ற மாதிரி விலங்குகள் நல வாரியம் போன்ற விளையாட்டை ஆடி இடையூறு செய்யாதீர்கள். சும்மா சீண்டி பயமுறுத்துவோம்னு இறக்கி விட்டுறாதீங்க. சினிமாவை இந்த மாதிரி பிரச்சனைகளிலிருந்து காப்பாத்துங்க.

இயக்குநர் இராமநாராயணன் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். அதில் பாதி விலங்குகளை வைத்தே படமெடுத்துள்ளார். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத பண்பாளர். தயாரிப்பாளர் சங்க செயல்பாட்டில் முழுமையாக எல்லோரையும் அரவணைத்துச் சென்றவர். அவரின் மகன் முரளி எடுத்திருக்கும் இப்படம் ஏகப்பட்ட இடையூறுகளைக் கடந்து வந்திருக்கிறது. அவருக்காகவும் இந்தப் படம் நல்லபடியாக வெளிவர வேண்டும். வெற்றி பெற வேண்டும்”.