Search
Thursday 22 March 2018
  • :
  • :

வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் இயக்குனர்களுக்கு முதல் கதாநாயகன் : இயக்குநர் பொன்ராம்


ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, பிரஜின், நிஷாந்த் தயாரிப்பாளர் இளைய அரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

*விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது*

“இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை. அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன்- ஹீரோ, எல்லாமே. அதை மறந்து விடக் கூடாது. இந்த நான்கு நிமிட பாடல்
ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை இரண்டு முறை போட்டார்கள். அதற்குள் பாடல், கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன.

இதுமாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக் கொள்ளும்ஒரு முயற்சிதான். எஸ்.எம்.எஸ்.ராஜேஷ் கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக் காட்டி விட்டுத்தான் பட வாய்ப்பை பெற்றார். திரையிட்டபோது இதை முதல் முறை பாடலாகப் பார்த்தேன். இரண்டாவது முறை அதில் இருந்த கதையைப் பார்த்தேன். இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். “என்று கூறி வாழ்த்தினார்.

நடிகர் பிரஜின் பேசும் போது, “குமரன் முதலில் இயக்கிய ‘வயோல்’ குறும்படம் சர்வதேச விருதுகளைப் பெற்றது.
இந்த ஆல்பமும் ஒரு படம் போல உணர்ந்து செய்திருக்கிறார். ஒன்றரை வருஷத்துக்கு முன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதில் வரும் வில்லன் வேடம் பிரமாதமாக இருக்கும். கதாநாயகனைவிட பெரியதாக இருக்கும். அதை செய்ய ஆர்வமாக இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு நிஷாந்துக்குப் போய்விட்டது. நான் கதாநாயகன் ஆகிவிட்டேன். போராடினால்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் 5 ஆண்டுகள் போராடி ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படம் எடுத்தோம். முதல்வர் மரணம், வர்தாபுயல் வந்ததால் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் உழைப்பு இன்றும்
பாராட்டப்படுகிறது.” என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது, “இந்தக் குமரனை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும் முதலில் இவர் ஆக்ஷன் சொன்னது
என்னை வைத்து ‘மாற்றம்’ குறும்படம் எடுத்த போதுதான். நான் முடியாது என்று எப்போதும் சொல்ல மாட்டேன். ஒரு ஈ கதாநாயகனாகும் போது, ஒரு ஈ வில்லனாக முடிகிற போது நாம் கதாநாயகனாக ஆக முடியாதா? நான் எல்லாரையும்
ஊக்கப் படுத்தியே பேசுவேன். முயற்சி திருவினை ஆக்கும். தம்பி குமரன் இயக்குநராகியிருக்கிறார். வாழ்த்துக்கள். தம்பி.” என்றார்.

இயக்குநர் குமரன் பேசும்போது, “நான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது இந்த ஒரு நாளுக்காகத்தான். கல்லூரிப்
படிப்பு முடிந்து உதவி இயக்குநராகவும் முடியாமல் இருந்த போது என் அம்மா, அப்பா இருவருமே பிடிச்சதை நீ பண்ணுடா நாங்க உனக்கு உதவி செய்கிறோம் என்றார்கள். அதை என்னால் மறக்க முடியாது ‘வயோல்’ குறும்படம் நிறைய விருதுகள் பெற்றது.

இந்த ஆல்பத்தைத் தயாரிக்க முன் வந்த ரெஜினா பிக்சர்ஸ் ரெக்ஸை மறக்க முடியாது. நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி இருவரையும் எதுவுமே தெரியாமல் வாருங்கள் என்றுதான் கூப்பிட்டேன். அப்படி வந்து இப்படி அழகாக நடித்துவிட்டார்கள். பூஜையே போடாமல் என் அடுத்த படம் இந்த ஆல்ப அறிவிப்புடன் தொடங்கி விட்டது. அதற்கு உழைக்க இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கி விட்டேன்.” என்றார்.

ஆடுகளம் நரேன் பேசும்போது, “நான் இதை எதிர் பார்க்கவில்லை. அசத்தி விட்டாய் குமரன், இது ஆல்பம் அல்ல.
ஒரு படம் முழுப்படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது..”என்றார்.

ஆல்பம் இசையமைப்பாளர் ஜுபின் பேசும்போது, “முதலில் குமரன் இந்தக் கதையைச் சொன்ன போது, அது ஒரு உண்மை நிகழ்ச்சி என்ற போது ஆச்சரியமாக இருந்தது. நான் கதைக்குள் இறங்கி உடனே வரிகளும் எழுத
ஆரம்பித்துவிட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போன போது எல்லாரும் ‘வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்ற போது என் கவனம் இதன் மீது போனது. தனியே வந்து ‘இரு உயிர் இடம் மாறும் ஒரு காதலின் புதுப்பயணம்’ என்று
வரிகள் போட ஆரம்பித் துவிட்டேன்” என்றார்.

ஆல்பம் வெளியீட்டு விழாவிலேயே இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பும் வெளியிடப் பட்டது. அனாமிகா பிக்கர்ஸ் சார்பில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை விநியோகம் செய்த இளைய அரசன் ஹன்சிகா எண்டர் டெய்ன் மெண்ட்ஸ் சார்பில் புதிய படத்தைத் தயாரிக்கிறார். குமரன் இயக்கத்தில் பிரஜின், நிஷாந்த் நடிக்க உருவாகவுள்ளது படம்.

நிகழ்ச்சியில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ இயக்குநர் ஜி.மோகன், ஆல்பம் நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி, நடன இயக்குநர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன், எடிட்டர் தீபக், கலை இயக்குநர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.