Search
Sunday 16 December 2018
  • :
  • :

ஆறு அத்தியாயத்தில் அரசை கலாய்த்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 6 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கியுள்ள “6 அத்தியாயம்” படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. ஹாலிவுட், பாலிவுட் சினிமாவில் மட்டுமே செய்யப்பட்டு வந்த “அந்தாலஜி” பாணியிலான திரைப்படத்தை 6 வெவ்வேறு குழுக்களை வைத்து ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இ . இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன் பேசும்போது தனது வழக்கமான பாணியில் பேசி அரங்கத்தை கலகலப்பாக்கினார்.
அவர் பேசியதாவது,

“மழை வணக்கம். மத்திய அரசு செய்யவேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள். 2.0 ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷயம் உள்ளவர்களை பார்த்தால் தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவை பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன். தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்” என்றார்.