Search
Tuesday 22 January 2019
  • :
  • :

கானா-ராப்-ராக்.. பனி இரவில் ஓர் அரசியல் இசை!

இசை வழியே அரசியலை இவ்வளவு ஆக்ரோஷமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா? என்ற வியப்பைத் தந்தது “THE CASTELESS COLLECTIVE” இசை நிகழ்ச்சி. இயக்குநர் பா.இரஞ்சித்தின்
“நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வு, சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளி மைதானத்தை பனிப்பொழிவையும் கடந்து உக்கிரமாய் தகிக்க வைத்திருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, வலியை, வேண்டுகோளை அவர்களது மொழியாலேயே சொல்லும் போது கிடைக்கிற வடிவமும் அழுத்தமும் முற்றிலும் வேறுபட்டதாகவும், வலிமையானதாகவும் மாறிவிடுகிறது
என்பதை அச்சரம் பிசகாமல் உணர்த்தியது நிகழ்ச்சி. இதுபோல முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி இந்தியாவில் வேறெங்கிலும் நிகழ்ந்திருக்கிறதா? என்பது கேள்விக்குறி.

ஒவ்வொரு பாடலும் ஏங்கிக் கிடக்கிற அவர்களது ஆசைகளையும், தேங்கிக் கிடக்கிற உள்ளக் குமுறல்களையும் இந்த பொது சமூகத்தின் முன்னால் கேள்விகளாக முன் வைப்பவையாகவே இருந்தன. சென்னையின்
பூர்வகுடிகளின் இசையாகிய “கானா”வை, ராப் மற்றும் ராக் இசையுடன் கலந்து உருவாக்கப்பட்டிருந்த 20 பாடல்கள் முழுவதிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல்!

மாலை 6 மணிக்கு முன்னர், நிகழ்ச்சியைப் பற்றி சாதாரணமான மனநிலையே இருந்தது. ஆனால், அங்கே குழுமியிருந்த கூட்டமும் அவர்களது உற்சாகமும் நம்மை வேறொரு மனநிலைக்கு இட்டுச் சென்றது.
எந்த ஒரு அடையாளமும் பெற்றிராத கலைஞர்கள், ஒவ்வொருவரும் இந்த வாய்ப்பை அப்படியே பிடித்துக் கொண்டு பின்னிப் பெடலெடுத்தார்கள்.

மாற்றம் என்பது நாம் செயல்பட ஆரம்பிக்கும் தருணத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. அது தான் பா.இரஞ்சித்தின் முன்னெடுப்புகளின் வெற்றி. அது தான் அங்கே குழுமியிருந்த எளிய மனிதர்களின் வெற்றி.
அந்த முகங்களில் தென்பட்ட மகிழ்ச்சி வெறும் இசையினைக் கேட்டதால் மட்டும் ஒளிர்ந்ததல்ல, நம்பிக்கையால் வந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியின் முடிவில்,

“இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கமே நாம் அரசியல் செய்ய வேண்டும் என்பது தான். நீ யாரென்பதை முதலில் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். நீ இங்கு என்ன நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை உணர வேண்டும். மேலும் மேலும் சீரழிந்து கெட்டுப் போகக் கூடாது. நம் அரசியல் வலிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இவ்வளவு விஷயங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
புரட்சியாளரைப் பின்தொடர்வோம், அரசியல் செய்வோம். ஜெய் பீம்” என்று பா.இரஞ்சித் பேசி முடித்த போது விண்பிளந்த ஆர்ப்பரிப்பு என்பது வெறும் சினிமாக்காரராக மட்டுமே கருதி கிடைத்தில்லை.

இவை அத்தனையையும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது மனைவியுடன் ஒரு ஓரமாக அமர்ந்து உற்சாகமாய் ரசித்துக் கொண்டிருந்ததைக் காண வியப்பாய் இருந்தது நமக்கு.

சந்தோஷ் நாரயணன் மட்டுமல்லாது, நடிகர்கள் காளி வெங்கட், ஆர்.ஜே.ரமேஷ், கார்த்திக், டிங்கு, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், மீரா கதிரவன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, கரண் கார்க்கி, கீதா இளங்கோவன், மீனா சோமு, பேராசிரியர் செம்மலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ், முற்போக்கு மாணவர் கழகத்தின் பாரதி பிரபு, மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் சவீதா, மருத்துவர் எழிலன் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். பிரபலங்களும் ரசிகர்கள் போல மிக சாதாரணமாக ஆங்காங்கே நின்று ரசித்தனர்.
இன்னும் பெயர் குறிப்பிடாத பிரபலங்கள் பலரும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறுதிவரை நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள்.

இனி வரும் காலங்களில் தமிழகம் முழுதும் இது போல முழுக்க முழுக்க அரசியல் படுத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஏனெனில் கலையை விட அரசியல் பேசுவதற்கான சிறந்த சாதனம் வேரேதும் இங்கு இல்லை.