Search
Tuesday 16 October 2018
  • :
  • :

எங்களுக்குள் பிரிவினை இல்லை- பா.ரஞ்சித்!

தி.நகர் சர்.பி.டி.தியாகராய ஹாலில் “அறம்”, “விழித்திரு”, “ஜோக்கர்” படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜு முருகன் ஆகியோருக்கு “விடுதலை கலை இலக்கிய பேரவை” மற்றும் “மருதம் கலைக்கூடம்” இணைந்து பாராட்டு விழா நடத்தின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித் பல நாட்களாய் நிலவி வந்த புரளிக்கு கோபி நயினார் முன்னிலையிலேயே முற்றுப் புள்ளி வைத்து பேசினார். அதோடல்லாமல் இருவரும் வேறு வேறல்ல என்றும் பேசினார். பா.ரஞ்சித் பேசியதாவது,

“தோழர் ராஜுமுருகன் மாதிரியான இயக்குநர்கள் சமூகத்தை நெருக்கமாகப் பார்த்து அவ்வளவு அழகாக எழுதுகிறார்கள், படைப்பாக்குகிறார்கள். அவருடைய பார்வையில இந்த சமூகம் ஏன் சமத்துவமில்லாமல் இருக்கிறது?, ஏன் இவ்வளவு பிரிவுகள்? என்று நிறைய கோபம். அவருக்குள் இருக்கிற கோபங்கள் தான் அவருடைய படைப்பாக வெளிவருகின்றன.

ஆளுபவர்கள், இந்த சமுகம் பிரிந்தே இருக்க வேண்டும், தலித், தலித் அல்லாதவர்கள் என்றே இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆனால், சாதி இருக்க வேண்டும் என்று சொல்பபவர்கள் ஒரு பக்கமும், இருக்கக் கூடாது என்று சொல்பவர்கள் ஒரு பக்கமுமாகத் தான் இந்த சமூகம் பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினை கண்டிப்பாக ஒழிய வேண்டும்.

மீரா கதிரவன் அண்ணன் பல குறியீடுகளுடன் அற்புதமான படமாக, `விழித்திரு’ படத்தை உருவாக்கியிருந்தார். படம் எடுப்பது கஷ்டமென்றால், அதை வெளியிடுவது ரொம்பக் கஷ்டம். மிகவும் சிரமப்பட்டு தான் இந்தப் படத்தை வெளியில் கொண்டு வந்திருக்கிறார். இப்போது வரைக்கும் அது கொடுத்த துன்பங்களில் இருந்துஅவர் மீளவில்லை. அவர் அடுத்தடுத்து இன்னும் நிறைய சிறந்த படங்களை கொடுக்க வேண்டும்.

அண்ணன் கோபி நயினாரோட “அறம்” பல முக்கியமான பிரச்னைகளைத் தொட்டுப் பேசுகிறது. இந்த மாதிரியான படங்கள் சமூகத்துக்கு ரொம்ப அவசியம். பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வராத போது நயன்தாரா இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதனால்தான் அதில் சொல்லப்பட்ட கருத்துகள் யாவும் பரவலாகப் போய் சேர்ந்திருக்கிறது. அப்படி விவாதமாவது ரொம்ப முக்கியம். கோபி அண்ணன் இதே மாதிரியான படங்களைத் தொடர்ந்து இயக்க வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இது தவிர, ஒரு சின்ன விளக்கமும் தர வேண்டியிருக்கிறது. இப்போது சமூக வலைதளங்களில் நான் கோபி நயினார் அண்ணனனிடம் வேலை பார்த்ததாகவும் அவருடைய கதை விவாதத்தில் ஈடுபட்டதாகவும் பேசிக் பொண்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. கோபி அண்ணன் என்னுடைய காலேஜ் சீனியர். அந்த வகையிலதான் அவரை எனக்குத் தெரியும். “மெட்ராஸ்” படம் திரைக்கு வருவதற்கு முன்னால், “கருப்பர் நகரம்” படம் மாதிரியே இருப்பதாக ஒரு வழக்கு போடப்பட்டது. நான் என் படத்தினுடைய டிவிடி, ஸ்கிரிப்ட் எல்லாம் சமர்ப்பித்து, “கருப்பர்நகரம்” வேறு, “மெட்ராஸ்” வேறு என்று நீதிமன்றத்தில் நிரூபித்த பிறகு தான் “மெட்ராஸ்” ரிலீஸ் செய்யப்பட்டது. இதைப் பற்றி அப்போதே கோபி நயினார் அண்ணனிடம் பேசினேன். அந்தப் பிரச்னை அப்போதே முடிந்த ஒன்று. ஆனால், இப்போது சிலர் வேண்டுமென்றே கதைத் திருட்டு, அது இது என்று ஆதாரமில்லாமல் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் . எங்களுக்கு நடுவில் பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள் . அவங்களுடைய முயற்சி ஒரு நாளும் பலிக்காது” என்றார்.