Search
Saturday 16 February 2019
  • :
  • :

நாச்சியார் விமர்சனம்!

மைனர் ஜெயில், காமெடி பிராமண ஜட்ஜ், “வத்தல்குழம்பு மண்டை” ஹீரோ, அநியாயத்திற்கும் வெகுளி ஹீரோயின் என பாலாவின் “டெம்ப்ளேட்” கொண்ட இன்னொரு படம் இந்த “நாச்சியார்”. எனினும், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை படங்கள் தந்த அயர்ச்சியிலிருந்து பாலாவே ஆசுவாசப்பட்டுக்கொள்ள
“நாச்சியார்” உதவக்கூடும்.

இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் விசாரனையில் இவானாவும், ஜிவியும் காதல் கொண்டவர்களாய்த் தெரிய வர, இருவரும் மைனர் என்பதால் ஜிவியை மைனர் ஜெயிலில் அடைக்கிறார்கள். இவானாவை ஜோதிகாவே பராமரிப்பில் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் இவானாவின் குழந்தைக்கு ஜி.வி.பிரகாஷ் தந்தையில்லை என்று டி.என்.ஏ ரிப்போர்ட்டில் தெரிய வர, யார் அந்த குழந்தைக்கு தந்தை? என்ற தேடலில் ஜோதிகா இறங்குவது தான் மீதி படம்.

கதைகளைத் தேடிப்பிடித்து படமாக்கும் பாலா, தயவு செய்து தன்னை இன்னும் கூட அப்டேட் செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்றேத் தோன்றுகிறது.
பாலாவின் திரைமொழி அவருக்குத் தந்திருக்கும் அடையாளம் என்ன என்பதை விரைவில் உணர்ந்து, அதை அவராகவே சரிசெய்து கொள்ள வேண்டியதும் முக்கியம்.

எந்தக் கதையையும், எந்த மனிதனின் வாழ்வியலையும் மேம்போக்கான அணுகுமுறையோடு படம் செய்யும் போது அதன் ஜீவன் உண்மையாய் இருப்பதில்லை. அப்படித் தான் இந்தப் படத்தில் பரிதாபத்திற்குரியவர்களாகக் காட்டப்பட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷும், இவானாவும் நம்மை எந்த வகையிலும் பாதிக்காமல் கடந்து போகிறார்கள்.

நாயகனும், நாயகியும் சென்னைத் தமிழ் பேசுகிறவர்களாகக் காட்டப்படும் போது அந்த மொழியை இன்னும் கூட இயல்பானதாக இருக்கும் படி வசனங்கள் இருந்தால் நல்லது. காரணம் நம் தமிழ் சினிமாக்களில் பேசப்படும் சென்னைத் தமிழ் என்பது இயல்பில் யாராலும் பேசப்படாதது. அதே போல தான் இப்படத்திலும் கலீஜ், ரீஜெண்ட், கஸ்மாலம் போன்ற வார்த்தைகளைக் கொண்டே சென்னைத் தமிழை நிரப்பிவிட முயற்சி செய்திருக்கிறார்கள்.

படத்தை ஒண்டி ஆளாகத் தூக்கி நிறுத்துபவர் ஜோதிகா தான். ஜோதிகா இந்தளவிற்கு ஃபிட்-ஆக இருப்பதே பெரிய ஆச்சர்யம். கோபம் கொண்ட அவரது கண்கள் ஆயிரம் மொழி பேசுகிறது. நடை, உடை, பாவணை என மிரட்டலாய் நடித்து தன்னை புதியதோர் தளத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். கருணை கொண்ட பெண்ணாகவும் நெஞ்சம் நிறைகிறார். ஜோதிகாவிற்கு வாழ்த்துகள் இப்படி ஒரு கணமான கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக.

ஜோதிகாவைப் போலவே, ராக்லைன் வெங்கடேசும் இயல்பாய் நடித்து முத்திரை பதித்துக் கொண்டுள்ளார். அவர் பேசும், “கடவுளுக்கு நேரம் போக வேண்டாமா?, வேணும்னா சொல்லு நாமலே புதுசா ஒரு சாமி செஞ்சிடலாம்” என்பது நச் வசனம். அந்த வசனத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல் மிக வலிமையானது.

ஜி.வி.பிரகாஷ் அப்படியே பாலாவிற்குத் தன்னை ஒப்படைத்திருக்கிறார். அவரளவிற்கு “காத்து” கதாபாத்திரமாக மாறுவதற்கு நிறையவே உழைத்திருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ.

இளையராஜாவின் பின்னணி இசைக்கு காற்றுள்ள வரை மதிப்பு உண்டு. புதிதாய் அவரைப் புகழ்வதற்கு நம்மிடம் என்ன வார்த்தை இருக்கிறது??

வழக்கமாக பாலா படங்களில் இருக்கும் கொடூரமான முடிவு இல்லாததற்கும், “சாதி வெறி பிடித்து பெற்று வளர்த்த மகளையும், மகனையும் ஆணவக் கொலை செய்யும் கூட்டம் இன்னும் இங்கு இருக்கிறது” என்ற ஒற்றை வசனத்திற்காகவுமே இந்த நாச்சியாரை ஆதரிக்கலாம்.

முடிந்தால் அடுத்த படத்திலாவது கொஞ்சம் கதை மாந்தர்களை மாற்றி வடிவமைக்க முயற்சி செய்யுங்கள் பாலா!!