Search
Thursday 20 September 2018
  • :
  • :

”மெர்சல்” பார்க்க வேண்டியதற்கான ஏழு காரணங்கள்!

”மெர்சல்” தமிழ் சினிமாவின் அனைத்து தரப்பு ரசிகர்களையுமே “ஐ ஆம் வெயிட்டிங்” சொல்ல வைத்திருக்கும் படம். தீபாவளி ரிலீசிற்கு வெறித்தனமாய் தயாராகி இருக்கும் மெர்சலைப் பார்க்கத் தூண்டுகிற முக்கியமான காரணங்கள் இதோ…

முதல் காரணம், பைரவா வரையிலும் ”இளைய தளபதியாக” இருந்த விஜய் மெர்சலின் மூலமாக ”தளபதியாக” ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். மேலும் முதல் முறையாக மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல், எண்பதுகளின் காலகட்டத்தில் இருப்பது போல் வரும் மதுரை மண்ணின் மைந்தன் கேரக்டர் விஜயின் கேரியரில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷலாக இருக்குமென்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது காரணம், ஏ.ஆர்.ரகுமான். அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பிறகு இப்போது தான் விஜய் படத்திற்கு இசையமத்திருக்கிறார். மெர்சலின் நான்கு பாடல்களுமே ஏற்கனவே அதிரிபுதிரி ஹிட். அதிலும், “ஆளப் போறான் தமிழன்” பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி ரசிகர்களை வெறிபிடிக்க வைத்திருக்கிறது. ஆஸ்கர் நாயகனின் மிரட்டல் பின்னணி இசைக்காகவே ரசிகர்கள் மரண வெயிட்டிங் இப்போது.       

மூன்றாவது காரணம், அட்லி. பார்க்கப் போனால் மூன்றாவது படம்தான், ஆனால் முந்தைய இரண்டு படங்களின் மேக்கிங் அவர் மீதான எதிர்பார்ப்பை  வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக விஜய் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

நான்காவது காரணம், தேனாண்டாள் ஃபிலிம்ஸ். குறைந்த பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்து வெற்றி பெறுவதில் வல்லவராகிய இயக்குனர்    ராம நாராயணனின் வாரிசாகிய தயாரிப்பாளர் முரளி ராமசாமி, இதுவரை தாங்கள் எடுத்துள்ள 99 படங்களின் மொத்த பட்ஜெட்டையும் ஒரே படத்தில் கொட்டி, தங்கள் நிறுவனத்தின் நூறாவது படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்கள். அதோடு மட்டுமில்லாமல் உலக அளவில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாக ”மெர்சல்” கிளப்பியிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பு நிறுவனம் நூறு படங்களைத் தயாரிப்பதே சிறப்பு தானே!

ஐந்தாவது காரணம், படத்தில் 3 தேவதைகள் நடித்திருப்பது தான். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று அழகுப் பதுமைகளும் ஒரே படத்தில் இருப்பது நிஜமாகவே தீபாவளி விருந்துதான்.

ஆறாவது காரணம், எஸ்.ஜே. சூர்யா. இயக்குனராக இருந்து நடிகராக மாறிய இவர், ”இறைவி” படத்தில் சிறப்பாக நடித்ததற்காகப் எல்லோராலும் பாராட்டப்பட்டார். அதோடு சமீபத்தில் ”ஸ்பைடர்” படத்தில் வில்லனாக நடித்து மிரட்டோ மிரட்டென்று மிரட்டியிருந்தார். அடுத்தடுத்து நடிப்பில் மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மெர்சலிலும் வில்லனாக நடித்திருப்பது எதிர்பார்ப்பை மேலும் அதிகப் படுத்தியிருக்கிறது.

ஏழாவது காரணம் சற்றே ஏழரையான காரணம், மெர்சலில் எப்படியாவது குறை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று ஒரு தரப்பு கோரப் பசியுடன் காத்திருக்கிறது. அந்த ஒரு தரப்பினர் தான் உலகிலேயே அதிகம் பேரால் ”யூ டியூப்” தளத்தில் பார்க்கப்பட்ட டீசர் வீடியோ என்ற சாதனையை செய்திருக்கிற மெர்சலை, அதிகம் பேரால்   “டிஸ்லைக்” செய்யப்பட்ட வீடியோ என்ற சாதனையையும் செய்ய வைத்தவர்கள்.

அந்த ஆறு காரணங்களுக்காக மெர்சல் பார்க்கப் போகிற ரசிகர்கள் ஒரு பக்கம், ஏழாவது காரணாமாகிய, குறை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக மெர்சல் பார்க்கப் போகிற ரசிகர்கள் இன்னொரு பக்கம் என மொத்தத்தில் இந்த வருட தீபாவளி ”மெர்சல் தீபாவளி” தான் நிஜமாகவே!!