Search
Monday 25 March 2019
  • :
  • :

மேற்குத் தொடர்ச்சி மலை – சிறப்பு விமர்சனம்!

எல்லாத் திரைப்படங்களையும் பத்திரிக்கையாளர் பார்வையில் இருந்து அணுகத் தேவையில்லை என்கிற சுய முடிவோடு, இந்த “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்கான விமர்சனத்தை எழுதுகிறேன்.

எனக்கொரு ஆசை..

இந்த தமிழ் சினிமா நீண்ட நாட்களாக புனிதமாக பிம்பப் படுத்தி வருகிற “விவசாயம்” என்பதின் போலித் தனத்தை உடைத்து.. அதனுள் இருக்கிற உழைக்கும் மக்களின் வலியையும்.. வேதனையையும்.. ஏமாற்றத்தையும்.. உழைப்புச் சுரண்டலையும் பதிவு செய்ய வேண்டும் என்று..

நேற்று, #மேற்குத்_தொடர்ச்சி_மலை படம் பார்த்து முடித்த பிறகு.. அந்த மலைக்காடுகள் முழுவதும் எங்கள் ஊர் வயல்காடுகளாகவும்.. அந்த மனிதர்கள் யாவரும் எங்கள் உறவினர்களாகவும் முழுமையாய் மனதில் இறங்கி இருந்தார்கள்..

தலைமுறை தலைமுறையாக நாள் கணக்கு பார்க்காமல், மழை.. வெயில் பார்க்காமல் சேற்று வயல்களில் உழைத்து உழைத்து.. கடைசி வரை கையளவு நிலம் கூட வாங்க முடியாமல் இப்போது வரை கூலிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற பல ஆயிரக் கணக்கானோர் அந்த மலைத் தொடரின் பசுமரங்களாக படர்ந்திருந்தார்கள்..

சொந்த நிலம் தான் இல்லை, குத்தகைக்காவது வெள்ளாமை விட்டு முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கையில்.. விதை நெல் முதல்.. உழவு, நடவு, உரம், தண்ணீர் அத்தனையையும் கடனுக்காக வாங்கி.. விளைந்ததில் பாதியை குத்தகைக்கு தந்துவிட்டு.. மீதியை கடனுக்குத் தந்துவிட்டு.. 120 நாள் கண்ணயராத உழைப்பிற்கு வெறுங்கையோடு உறங்கப் போகிற ஒருவனின் வலியைத் தான் ரெங்கசாமி பிரதிபலிப்பதாக எனக்குள் நினைத்துக் கொண்டேன்..

தமிழ் சினிமா எப்போதும் போலித் தனங்கள் நிரம்பி வழிகிற கலை வடிவமாக மாறிப் போயிருக்கிறது.. இங்கு மாபெரும் பொய்யை காட்சிப் படுத்தி, இதுதான் உண்மை என்று சூடமேற்றி சத்தியம் செய்கிற படைப்பாளிகளே அதிகம்.

அப்படியாகப்பட்ட கலை வடிவத்தில், இப்படியும் ஒரு வாழ்வை காட்சிப்படுத்த முடியுமா? என ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர், தோழர் #லெனின்_பாரதி.

ரெங்கசாமி, காயத்ரி, வனகாளி, கிறுக்குக் கிழவி, கங்காணி, சாக்கோ, லோகு, கழுதை வைத்து மூட்டை சுமக்கும் பெரியவர் என ஒவ்வொருவரும் தனித்தனியாக நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்..

வட்டார வழக்கு, முழுக்க முழுக்க மலையின் பச்சை, மலையேற்றம், புதிய சடங்கு முறைகள், அந்த எளிய மனிதர்கள் போகிற போக்கில் சக மனிதனுக்கு செய்கிற அன்பு, அவர்களது வைராக்கியம் என நகரத்து மனிதர்களுக்கு புத்தம் புதியதாய் தெரியக் கூடிய ஒரு கதையின் உள்ளே மிக நுணுக்கமாக முதலாளித்துவ, வர்க்க, உலகமயமாக்கல் போன்ற அரசியல் அவலங்களையும் பதிவு செய்திருக்கிறார் தோழர்.

அந்த ஏலக்காய் தோட்டங்களில் இரண்டு அட்டைகளை அவர் காண்பித்திருக்கிறார்.. ஒன்று ரத்தம் உறிஞ்சுவது.. இன்னொன்று உழைப்பை உறிஞ்சுவது..

“நம்ம பாதையில எங்க அதுக வந்துச்சு?.. அதுக பாதையில தானே நாம போய்கிருக்கோம்” என்று யானை வழித்தடங்கள் பற்றி சொல்லும் போது திருடப்பட்ட காடுகளைப் பேசுகிறார்..

அந்த ஊருக்கு பிழைக்க வந்த லோகு, “நீங்க இல்லாம நானில்லய்யா” என்று கூறிக் கொண்டே “லோகு அக்ரோ பிரமோட்ட்ஸ்” ஆக வளர்ந்து நிற்கும் போது.. அவனருகே குறுகி நிற்கிற ரெங்கசாமியின் மூலம் வர்க்க அரசியலைப் பேசி இருக்கிறார்..

“பின்னாடி என்ன விளைவு வரும்னு மின்னாடியே சிந்திக்கிறவன் தான் உண்மையான கம்யூனிஸ்ட்” என்று சாக்கோ மூலமாக கம்யூனிச பாடம் நடத்தி இருக்கிறார்..

தான் குருவியாய் சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய நிலத்திலயே கடைசியில் ரெங்கசாமி காவலாளியாக நாற்காலி போட்டு அமரும் போது, தாராளமயமாக்கலால் தவிடுபொடியாக்கப்பட்ட பல லட்சம் உழைக்கும் மக்களின் சிதைந்த கனவுகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்..

இப்படி படம் நெடுகிலும் அழகியலைத் தாண்டி, புரிந்து கொள்வதற்கு ஆயிரம் அரசியல் அர்த்தங்களை எந்த நெருடலும் இல்லாமல்.. வலிய திணிக்காமல்.. அதன் போக்கில் அழுத்தமாய் பதிவு செய்த்ததில் இருக்கிறது தோழர் லெனின் பாரதியின் வெற்றி.. அழுத்தமாய் ஆயிரம் முத்தங்கள் அவருக்கு..

தேனி ஈஸ்வர்.. அவரது கண்களின் வழியே மூச்சிறைக்க ஏறி.. கால் கடுக்க இறங்கி.. பச்சையோடு பழகி.. மழையோடு நனைந்து.. மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் பயணப்பட வைத்திருக்கிறார்.. எந்த இடத்திலும் செயற்கைத் தன்மை இல்லாமல், அழுத்தமான காட்சிகள் அத்தனையையும் ஆகாயத்திற்கு அருகில் சென்று கழுகாய் காட்சிப்படுத்தித் தந்திருக்கிறார்..

இன்றைய இசையமைப்பாளர்கள் பலருக்கு இல்லாதது, ஒரு படத்தின் ஜீவனை சிதைக்காமல் இசையமைப்பது எப்படி என்கிற அறிவுப் பற்றாக்குறை தான்.. கிடைத்த சிறிய இடத்தில் கூட காதுகள் அதிர, BGM போட்டு “ராக்ஸ்டார்” எனப் பேர் வாங்கிட ஆளாய்ப் பறக்கிறார்கள்..

ஆனால், நதியின் போக்கில் எதிர்ப்பே இல்லாமல் போகிற ஒரு இலை போல.. இந்தக் கதையோடு சத்தமே இல்லாமல் பயணித்திருக்கிறார் இசைஞானி. தேனி ஈஸ்வரின் கேமரா, மேல்நோக்கி தூரமாக செல்கிற போது மட்டுமே இசைக்கருவிகளுக்கு வேலை கொடுத்திருக்கிறார்… இத்தனை இயல்பாய்.. இத்தனை ரம்மியமாய்.. இத்தனைக் காதலாய்.. இத்தனை சோகமாய்.. இத்தனை ரௌத்ரமாய்.. அவரால் மட்டும் தான் பின்னணி இசை கோர்க்க முடியும் என்பதை இன்னும் எத்தனை முறை தான் நிரூபிப்பார்??..

இன்றைய தமிழ் சினிமா முழுக்க கார்ப்பரேட் மயமாகியிருக்கும் போது.. வியாபாரம்.. வினியோகஸ்தர்.. என இருக்கிற அத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியில் இந்தப் படத்திற்காக செலவு செய்த நடிகர் விஜய் சேதுபதி.. தனக்குத் தந்த சினிமாவிற்கு, திருப்பித் தந்த கொடையாக இந்த ##மேற்குத்_தொடர்ச்சி_மலை வந்திருக்கிறது.. வாழ்த்துகள்!

கடைசியாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. எத்தனையோ குப்பைத் திரைப்படங்களை எல்லாம் பொழுதுபோக்குத் திரைப்படங்களாக அங்கீகரித்து வசூலை வாரித் தந்திருக்கிறீர்கள், வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். இப்போது உங்களின் ரசனைத் தன்மையை மீட்டுக் கொள்ள, அரிதாய் மலர்கிற குறிஞ்சிப் பூவாக வந்திருக்கும் இந்த “மேற்குத் தொடர்ச்சி மலை” மாதிரியான திரைப்படங்களையும் ஆதரியுங்கள்.. வெற்றி பெறச் செய்யுங்கள்.. நல்ல சினிமாக்களுக்கான நம்பிக்கை நீரூற்றுங்கள். நன்றி.

#பா_பிரேம்.