Search
Thursday 21 June 2018
  • :
  • :

குறும்பட இயக்குநர்களுக்காக லிப்ரா குறும்பட விழா..!

சினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக் கொண்டுதான் போகிறது. ஒரு காலத்தில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குனர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் என வழக்கமான பாதையில் செல்லாமல் குறும்படம் மூலமாக தனது திறமை இதுதான் என வெளிச்சம் போட்டு காட்டி அதையே தனது விசிட்டிங் கார்டாக மாற்றி படம் பண்ணும் இளைஞர் கூட்டம் ஒன்று சினிமாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்துகொண்டு இருக்கிறது.

அப்படி நுழைபவர்களுக்கான வாசல் குறுகியதாகவே இருக்கிறது. அந்த வாசலை விரியத் திறந்து வைத்து படைப்பாளிகளுக்கு ஒரு அற்புதமான மேடை அமைத்து கொடுக்கும் வேலையை கையில் எடுத்துள்ளது லிப்ரா புரொடக்சன்ஸ். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரொடக்சன்ஸ்.

நளனும் நந்தினியும், சுட்ட கதை, விரைவில் வெளிவர இருக்கும் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இருந்து கொண்டு இந்த குறும்பட விழாவை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற சந்தேகத்தை, லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரிடமே கேட்டோம்.

“பொதுவாக குறும்படம் எடுப்பவர்கள் கொஞ்சம் செலவு செய்து, யாரோ ஒரு சில சினிமா பிரபலங்களைக் கூப்பிட்டு, திரையிட்டு காட்டி அந்த பாராட்டோடு சந்தோஷப்பட்டு நின்று விடுகிறார்கள். இன்னும் சிலர் அதை வைத்து யாரிடமாவது உதவி இயக்குனராக சேருகிறார்கள். அவ்வாறு இல்லையென்றால் அதையே படம் இயக்குவதற்கு அனுபவமாக நினைத்து வாய்ப்பு தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால் சினிமாவில் இருப்பவர்களுக்கு எப்படி விருதுகள் தான் பாராட்டாக அமைகிறதோ, அதே போல சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற கனவோடும், வெறியோடும் குறும்படங்களை இயக்குபவர்களுக்கு நிச்சயம் விருதுகள் தான் பாராட்டும் ஊக்கமுமாக அமையும். அப்படிப்பட்ட ஒரு களத்தை அவர்களுக்கு அமைத்து கொடுப்பதற்காகத்தான் இந்த குறும்பட திருவிழாவை நடத்துகிறோம்.” என்கிறார்.

குறும்பட விழாக்கள் நடத்துவது ஒரு சேவை மட்டுமல்ல. இதுக்கு வர்த்தக ரீதியாக ஒரு ஓப்பனிங் இருக்கிறது. ஆனால் நாம் இன்றைக்கு விதை போடுகிறோம். அதோட பலன் கிடைக்க நமக்கு சில நாட்களாகும். அதேசமயம் பணம், லாபம் என்பதைத் தாண்டி இந்த குறும்பட விழா மூலமாக திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துகிறோம். நாளை அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அங்கே லிப்ரா விருது வாங்கியிருக்கிறேன் என்று அவர்கள் அதை ஒரு அங்கீகாரமாக சொல்வது தான் நாங்கள் எதிர்பார்க்கிற பலன்.

ஒரு 20 நிமிட குறும்படம் மூலமாக நம்மால் பத்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால், இதே அர்ப்பணிப்பையும், உழைப்பையும் திரைப்படத்தில் காட்டினால் அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபத்தை நாம் கொடுக்க முடியும் என்கிற உந்துதலை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த விருது ஏற்படுத்தும்.

என்னால் எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு படம் கிடைப்பதற்கான வாய்ப்பையும், அவர்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தர முடியும். வருங்காலத்தில் லிப்ரா அவார்ட்ஸ் என்றால் திரையுலகத்தில் மிக மரியாதையான ஒரு விஷயமாக மாற வேண்டும். இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துவதன் நோக்கம்.” என்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன் தெள்ளத்தெளிவாக.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள வரும் ஜூலை-15 தான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்க கூடாது. ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் இந்த குறும்படங்களைப் பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்து பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் குறும்பட சிடிகளை No.14, 1st Cross Street, Lambert Nagar, AlwarThirunagar, Chennai – 87 எனும் முகவரிக்கு அனுப்பலாம். விவரங்களுக்கு Mobile: 97899 16561, Office: 044 – 4208 9658 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த போட்டி குறித்த அடுத்தகட்ட விபரங்களை லிப்ரா புரொடக்சன்ஸ் பேஸ்புக் பக்கத்தின் மூலம் அவ்வப்போது போட்டியாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

https://www.facebook.com/LIBRAShortFilmAwards/