Search
Monday 25 March 2019
  • :
  • :

“ஒத்தத் தல ராவணா.. பத்துத் தல ஆவுடா!!” – “காலா” பாடல்கள் ஒரு பார்வை!!

வழக்கமான ரஜினி படங்களின் வரிசையில் நிற்காமல் “கபாலி” படத்தின் பாடல்களை தனித்துவத்தோடு எடுத்துச் சென்றதில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் பெரும்பங்கு உண்டு. “நெருப்புடா நெருங்குடா”, “மாயநதி இங்கே”, “வீரத் துரந்தரா” என அத்தனை முத்துக்களும் ரஜினி ரசிகர்களுக்கான வேறு மாதிரியான “ட்ரீட்மெண்ட்”.

அந்த வகையில் அதே கூட்டணியின் “காலா” திரைப்படத்தின் பாடல்களும் வேரொறு தளத்தில் நின்று ஓங்கி ஒலிக்கின்றன. சந்தோஷ் நாராயணன் எப்போதுமே இசையின் வாயிலாக மாயம் செய்யக் கூடிய ஒரு வித்தகன். அப்படியொரு மாயக்காரரை வைத்துக் கொண்டு தான், ஆதிக்கத்தின் அடிமடியில் எரிச்சலூட்டும் வார்த்தைகளில் தேன் தடவி காற்றில் ஒலிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். அது ரஜினி என்கிற மாபெரும் திரை ஆளுமையின் குரலாக இருக்கிறபட்சத்தில் எங்கேயுமே தவிர்க்க முடியாததாக மாறிப் போகிறது.

ரஜினிக்கு அரசியல் பாடல்கள் ஒன்றும் புதியதில்லை. நீண்ட நெடும் காலமாக அவரது அறிமுகப் பாடல்கள் எல்லாமே அரசியல் வாசம் வீசும் பாடல்களாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் “காலா” பாடல்களின் அரசியல் என்பது, முற்றிலும் மாறுபட்டது. அது ரஜினியை முதல்வனாக வா, நாடாள வா என அழைப்பதான பாடல்களாக ஒலிக்கவில்லை. மாறாக ஆண்டாண்டு காலமாக இம்மண்ணில் அடக்குமுறையை மட்டுமே எதிர்கொண்டு, குரல்வலை நெறிக்கப்பட்ட ஒரு மக்கள் திரளின் வலியையும், கோபத்தையும், வேண்டுகோளையும் ஒரே குரலில் ஒலிக்கச் செய்திருக்கிறது.

அதிலும் “நிலமே எங்கள் உரிமை” என்கிற அறிவரசு எழுதியிருக்கும் பாடல் ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவனின் உள்ளக் குமுறல். காரணம், இங்கு பொதுத்தளத்தில் இயங்கும் பலருக்கு “பஞ்சமி நிலம்” குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் சூழலில், இந்தப் பாடலின் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் நில உரிமை குறித்து பேச முற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. “யார் வச்சது யார் உன் சட்டமடா.. இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா” என்கிற வரிகள் சென்னையிலிருந்து துரத்தப்பட்டு கண்ணகி நகர், பெரும்பாக்கம் கான்கிரீட் சிறைக்குள் குடி வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் குடும்பங்களின் குரல்.

“போராடுவோம்” என்கிற பாடல் ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் இருக்க வேண்டிய போராட்டக் குணத்தைத் தட்டியெழுப்பும் உணர்வினை வெளிப்படுத்தியிருக்கிறது. “நிலம், நீர் எங்கள் உரிமை போராடுவோம்.. எங்கள் உரிமையை மீட்க போராடுவோம்.. எங்கள் தலைமுறை காக்க போராடுவோம்.. ” என்று ராப் இசையில் எகிறி அடிக்கும் அந்தப் பாடல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.

“தெருவிளக்கு வெளிச்சத்துல” பாடலில் “அழுக்கு சாக்கடை இருந்தாலும் எங்க மனம், சுத்த மனம்.. ஜாதி மதம் தாண்டி ஒன்னா வாழுவோமே தெருவுல” என்று டோப்படெலிக்ஸ் மற்றும் முத்தமிழ் பாடப் பாட “காலா” படத்தின் அரசியல் வீச்சு எந்த மாதிரியாக இருக்கும் என்பதை நம்மால் ஊகித்துக் கொள்ள முடிகிறது.

இப்படியாக அத்தனை பாடல்களும் அரசியல்.. அரசியல்.. கோபம்.. என கொதிநிலையை உண்டாக்கிக் கொண்டிருக்க.. பூந்தோட்டத்தை கடந்து வந்த இளந்தென்றலாய் தேகம் சிலிர்க்க வைக்கிறது உமா தேவி எழுத்தில் உருவாகி இருக்கிற “கண்ணம்மா” பாடல். சந்தோஷ் நாராயணன்+உமா தேவி+ பா.இரஞ்சித் இம்மூவரும் சேர்ந்து ஒரு பாடல் உருவாக்கும் போது, அது எப்போதுமே ஏமாற்றாமல் மகிழ்வூட்டிப் போகும். “வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம், கானல்கள் நிறைவேற்றுமோ” என்பதெல்லாம் உமா தேவி-யின் ட்ரேட்மார்க் டச்.

அதே ரகம் தான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சங்கர் மகாதேவன் பாடியிருக்கும் “தங்க செல” பாடலும். அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கும் “ஒத்தத் தல ராவணன் பச்சப்புள்ள ஆவுறேன், கக்கத்துல தூக்கிக்க வரியா?” வரிகள் குதுகலத்தின் உச்சம். நரை கொண்டாடும் ஒரு காதலின் வெளிப்பாடு.

மற்றபடி, “செம்ம வெயிட்டு”, “கற்றவை பற்றவை” எல்லாம் தீப்பொறியைக் கிளப்பி பட்டாசு கொளுத்துகின்றன. ஆனாலும், வழக்கமான ரஜினி படத்தின் பாடல்களாக இல்லாமல் எப்போதும் போல சந்தோஷ் நாராயணன் தனது ஸ்டைல் பாடல்களையே “காலா” படத்திலும் வைத்திருப்பது சரிபாதி ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்துமா? என்பது கொஞ்சம் சந்தேகமே!!