Search
Tuesday 22 January 2019
  • :
  • :

காலா விமர்சனம்!

ராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு ராவணனை கொண்டாடுவதற்கு பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பா.இரஞ்சித்..

ரஜினியை ஆராதிக்கிற ஒரு கூட்டம்.. அரசியல் அரங்கில் அவருக்கு எதிராய் நிற்கும் ஒரு கூட்டம்.. தன்னை நேசித்துக்
கொண்டாடுகிற ஒரு கூட்டம்.. தான் முன்வைக்கும் அரசியல் மீது வெறுப்பு கொண்டு, தனக்கு எதிராக நிற்கும் ஒரு கூட்டம்..
இந்தியாவின் உச்ச நடிகர் ஒருவரை இரண்டாம் முறையாக இயக்குவதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக
பயன்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்கிற அழுத்தம் என, இத்தனைக்கும் மத்தியில் பா. இரஞ்சித் எந்த இடத்திலும்
யாருக்காகவும் தன்னை விட்டுத் தராமல், ரஜினிக்கான முழுமையான படமாகவும் “காலாவை” செதுக்கியிருப்பதற்காகவே இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு இவையாவும் அடிப்படை உரிமைகளாக அறிவிக்கப்பட்டிருக்கிற இதே
இந்தியாவில் தான், சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டிற்கு மேலாகியும் பல கோடி இந்திய பிரஜைகள் வாழ்வதற்கு
மட்டுமல்லாமல், செத்த பின் எரிப்பதற்கு சுடுகாடு கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

நிலம் என்பது ஆதிக்கத்தின் குறியீடாக இருக்கிற இந்திய சமூகத்தில், உழைப்பவர்கள் அத்தனை பேரும்
நிலமற்றவர்களாகவே வாழ்ந்து செத்துப் போவது தான் வரலாறாக இருக்கிறது. உதாரணத்திற்கு சென்னையை விட்டு
ஒதுக்குப் புறங்களுக்கு விரட்டியடிக்கப்படும் குடிசைவாழ் மக்களையே சொல்லலாம்.

நம் நாட்டில் நகரங்களை நிர்மாணிப்பதற்காக தங்கள் உயிர் மொத்தத்தையும் உருக்கி உழைக்கும் எளிய மக்களை,
அரசுகளும் ஆதிக்கமும் நகரத்திற்குள் வாழ தகுதியற்றவர்கள் எனக் கூறி முகாம்களுக்கு விரட்டியடிப்பது தான்
வாடிக்கையும், வரலாறும்.

இன்று பல நகரங்களில் வானளாவ நிற்கிற கட்டிடங்களுக்கான அடித்தளம் என்பது பல ஏழை எளிய மக்களின்
குடிசைகளை நொறுக்கி அதன் செங்கல்களிலிருந்து போடப்பட்டது தான்.

அப்படி அரசிடம் இருந்தும், அரசிற்கு எல்லாமுமாக இருக்கக் கூடிய ஆதிக்கத்திடம் இருந்தும் நகரத்தின் மையத்தில்
குடிசைகளால் நிறைக்கப்பட்ட ஒரு குறு நிலப்பரப்பை காப்பாற்றி கட்டியாள்கிற “காலா” என்கிற “காலா சேட்” என்னும்
தனி மனிதன்.. அவன் சார்ந்திருக்கும் குடும்பம்.. அவனைச் சார்ந்திருக்கும் சமூகம்.. இவர்களைப் பற்றியது தான் இந்தப்
படம்.

படம் நெடுகிலும் தெறிக்கிற அரசியலைத் தாண்டி ஈஸ்வரி ராவ் – ரஜினி – ஹியூமா குரேஷி ஆகியோரின் காதலை
கவனிக்கத்தக்க வகையில் நெகிழ்ச்சி ததும்பியதாக படமாக்கியிருப்பது, ரஞ்சித்திற்குள் இருக்கும் கவித்துவமான
கலைஞனைக் கவனிக்க வைக்கிறது.

ஒரு குறுநில மன்னனாக வாழும் காலாவிற்கு நிகரானவராக இல்லாமல் காலாவை விட அதிகாரமும், பலமும் பொருந்திய
எதிரியாக ஹரிதாதாவை (நானா படேகர்) உருவாக்கியது படத்திற்கு யானை பலம் சேர்த்திருக்கிறது. அவர் உருவாக்க
நினைக்கும் மும்பை என்பது இந்தியாவை மயக்கத்தில் வைத்திருக்கிற பல புதிய திட்டங்களை நினைவூட்டுகின்றன.
கருப்பு, காவி குறியீடுகளை படம் நெடுகிலும் நிரப்பி, இது எந்த அரசியலைத் தாங்கிய படம் என தெளிவாக
புரியவைத்திருக்கிறார் ரஞ்சித். அதன் முக்கியத்துவம் உணர்ந்து, தனது ஒட்டுமொத்த ஆற்றலையும் திரட்டி கம்பீரமான ஒரு வில்லனை நமக்கு பரிசளித்திருக்கிறார் நானா படேகர். ப்ப்பா.. என்ன ஒரு நடிப்பு, அடிபொலி!

எந்த அளவிற்கு அரசியல் வசனங்களால் பொறி கிளப்பியிருக்கிறார்களோ, அதே அளவிற்கு ரஜினிக்கான
அடையாளமாகிய கமெர்ஷியல் காட்சிகளையும் தெறிமாஸ் லெவலுக்கு அதிரடித்திருக்கிறார்கள். அதற்கேற்றார்போல்
ரஜினியும் ஒரு காதலனாக, கணவனாக, தந்தையாக, நண்பனாக, தலைவனாக பல பரிமாணங்களையும் மிக அழகாக,
அசால்டாக நடித்துத் தள்ளியிருக்கிறார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் வசனங்களுக்காக பலர் புகழ் பெற்றிருந்தாலும் “காலா” பேசும் அழுத்தமான, நேரடியான
விளிம்புநிலை மனிதர்களுக்கான வசனங்களைப் போல தீவிரமான அரசியல் பொதிந்த வசனங்களை யாரும் இதுவரை
எழுதவில்லை என்றே சொல்லலாம். வசனங்களுக்காக சிறப்பு வாழ்த்துகள் எழுத்தாளர்கள் மகிழ்நன் பா.ம, எழுத்தாளர்
ஆதவன் தீட்சண்யா மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோருக்கு.

பாடல், பின்னணி இசை இரண்டிலும் சந்தோஷ் நாராயணன் சட்டி மேளம் போல சலம்பியிருக்கிறார். காலாவுக்கு
போட்டிருக்கிற பீஜிஎம்மை விட ஹரிதாதாவிற்கு போட்டிருக்கும் பீஜிஎம் அலறடிக்கிறது. “நிலமே எங்கள் உரிமை”,
“கற்றவை பற்றவை” பாடல்கள் உணர்ச்சிவசப்படத் தூண்டினாலும், “கண்ணம்மா” பாடல் உயிரின் உள்ளே இறங்கி
இதயத்தின் நரம்புகளை அசைக்கிறது. கபிலன், உமாதேவி, அறிவு ஆகியோரது பாடல் வரிகள் படத்திற்கு பலம்
சேர்ந்திருக்கிறது.

சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், திலீபன், மணிகண்டன், சம்பத், அருள்தாஸ், சாக்‌ஷி
அகர்வால், ரமேஷ் திலக் என ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் கனமான கதாபாத்திரங்களை நிறைவான
நடிப்பின் மூலம் உயிரூட்டியிருக்கிறார்கள்.

படத்தில் ரஞ்சித், ரஜினியைத் தாண்டி தனியாக தெரிபவர்கள் கலை இயக்குநர் டி.ராமலிங்கமும், ஒளிப்பதிவாளர் முரளி.ஜி – யும் தான். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவி தகரக் கொட்டகைகளை அப்படியே பெயர்த்தெடுத்து வந்து வைத்தது போல் செட் அமைத்த ராமலிங்கத்தை புகழ்வதா?, அவர் உருவாக்கித் தந்ததை அங்குலம்  அங்குலமாக தனது காமிராவைக் கொண்டு சிறைபிடித்த முரளியைப் புகழ்வதா? என்ற பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இருவரும். இருப்பினும் ராமலிங்கத்திற்கு “காலா” பல விருதுகளை வாங்கித் தரும்
தகுதியுடையது.

தங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள நினைக்கிற எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் கருப்பு, சிவப்பு, நீலம் இம்மூன்றும்
உணர்த்தும் கருத்தியல்களை கடைபிடிக்காமல்.. கைகொள்ளாமல் எந்த ஒரு எதிரியையும் வீழ்த்த முடியாது என்பதை
அழுத்தம் திருத்தமாக சொல்லும் “காலா” திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் நிறைந்த மிகச் சிறந்த படம்..

ஸ்பெஷல் லவ் ஃபார் பா.ரஞ்சித் அண்டு ரஜினிகாந்த்!