Search
Friday 15 December 2017
  • :
  • :

இந்திரஜித் – விமர்சனம்

பொதுவாகவே நம் தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு இருக்கிற அளவிற்கான எதிர்பார்ப்பு என்பது அட்வெஞ்சர், ஃபேன்டஸி திரைப்படங்களுக்கு இருப்பதில்லை. இயக்குநர் இராம.நாராயணன் அவர்கள் விலங்குகளை வைத்து பக்திப் படங்கள் எடுத்துப் பெற்ற வெற்றிகள் எல்லாம், “முன்னொரு காலத்தில்” என்று சொல்கிற அளவிற்கு ரசிகனின் மனநிலை இப்போது மாறிப்போயிருக்கிறது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கு அதிலிருக்கும் நம்பகத்தன்மையைப் பொறுத்து தான் அது வெற்றிப்படமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுகிறது. எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும், அந்த திரைக்குள் தானும் இருப்பதாக ரசிகன் உணரும் போது மட்டும் தான் அது மாபெரும் வெற்றிப்படமாகிறது.

“இந்திரஜித்” படத்தைப் பொறுத்தவரைக்கும் அது எந்த மாதரியான ஒரு படம் என்பதிலேயே நமக்குக் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.

அருமையான கிராஃபிக்ஸ் வொர்க்ஸ் இருந்தும் நம்பகத்தன்மை என்பது இல்லாத காரணத்தினால் படத்தோடு நம்மால் இறுதிவரை ஒன்ற முடியாமலேயே போய்விட்டது. எதையுமே அளவுக்கு மீறி திணிக்கும் போது அது சலிப்பிற்குறியதாக மாறி விடுகிறது. அப்படித்தான் இதிலிருக்கிற கிராஃபிக்ஸ் காட்சிகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

இது எப்படி சாத்தியமாயிற்று? என்ற கேள்விகள் படம் நெடுகிலும் நம்மோடு பயணித்துக் கொண்டே இருக்கின்றன. நமக்குள் எழுகிற எந்த கேள்விக்குமே படத்தில் விடையேயில்லை.

சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி இயக்குநர் கலா பிரபுவிற்கு. இதே கதயை கொஞ்சம் நம்பகத்தன்மையோடு செதுக்கியிருந்தால் நிச்சயம் தமிழின் மிகச் சிறந்த அட்வெஞ்சர் திரைப்படமாக இந்திரஜித் அமைந்திருக்கும்.

“இந்த நாட்டில் எல்லாமே இருக்கிறது, இந்த அரசாங்கம் அந்த வளங்களை யாருக்குத் தந்து கொண்டிருக்கிறது என்பதில் தான் பிரச்சனையே” என்று இடையிடையே சூப்பர் வசனங்கள் நம்மை ஈர்க்கின்றன.

பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் இல்லாமலே இருந்தருக்கலாம்.

ராசாமதியின் கேமிரா காடுகளின் பசுமையை அள்ளிக் கொண்டுவந்து கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது. மலைகளும், அருவிகளுமாக கண்களுக்குக் குளிர்ச்சி.

கௌதம் கார்த்தியின் முகத்திலிருந்து வருகிற எக்ஸ்பிரசன் எல்லாம் சூழலுக்கு சற்றும் பொருந்தவில்லை. உச்சி மலையிலிருந்து அதள பாதாளத்தில் விழுந்தாலும் ஆப்பிள் போல அப்படியே எழுந்து சிரித்துக் கொண்டே வருகிறார். இத்தனை படம் நடித்த பிறகும் இன்னும் நடிப்பு வரலன்னா எப்படி பாஸ்??

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல “இந்திரஜித்” போன்ற முயற்சிகளையும் பாராட்டித் தான் ஆகவேண்டும். ஆனால் அந்த முயற்சிகள் மேம்போக்கானதாகவும் இருக்கக் கூடாது என்பது நமது ஆசை.

குழந்தைகளோடு “ஒன் டைம் வாட்சபிள்” படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!

Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299