Search
Tuesday 22 January 2019
  • :
  • :

“கஜினிகாந்த்” – விமர்சனம்!!

ஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு “ஹரஹர மகாதேவ்கி”, “இருட்டு அறையில்” இரண்டு படங்கள் வசூலைக் கொடுத்திருந்தாலும், அவர் மீது ஒரு முத்திரை விழுந்திருந்தது. இப்படி இரண்டு பேருக்குமே இருக்கிற நெருக்கடியை போக்கி இருக்கிறதா இந்த “கஜினிகாந்த்”?.. வாங்க பார்க்கலாம்…

தீவிர ரஜினி ரசிகரான நரேன், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் “தர்மத்தின் தலைவன்” படத்திற்குப் போகிறேன். அங்கே திடிரென அவரது மனைவிக்கு பிரசவ வலி எடுக்க, தியேட்டரிலேயே ஆர்யா பிறக்கிறார். அந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்த காரணத்தினாலோ, என்னவோ ஆர்யாவுக்கும் ஞாபக மறதி வியாதி தொற்றிக் கொள்கிறது. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் “மைண்ட் டைவர்ட்” ஆகும் இவரது வியாதியை பார்த்து பலரும் இவருக்கு திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள். அப்படி பெண் தர மறுப்பவர்களில் சம்பத்தும் அடக்கம்.

இந்நிலையில், எதேச்சையாக ஒருநாள் சாலையில் சாயீஷாவை பார்க்கிறார், ஆர்யா. யெஸ், நீங்கள் நினைப்பது சரிதான். தமிழ் சினிமாவின் சொத்தான பார்த்த உடனே காதல் ஆர்யாவுக்குள் வந்து விடுகிறது. ஞாபக மறதியால் ஆர்யா செய்கிற சில சொதப்பல்கள், கோ இன்சிடென்சாக சாயிஷாவிடம் கனெக்ட் செய்கிறது. அந்த கனெக்‌ஷன் நட்பாகி, காதலாக மலர்ந்து விடுகிறது. ஆனால், சாதுர்யமாக தனக்கு ஞாபக மறதி இருப்பதை மறைத்து சாயீஷாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டேயிருக்கிறார்.

அதே நேரத்தில் காவல்துறை அதியாரியாக வருகிற “கபாலி” லிஜீசுக்கும் சாயிஷாவின் மேல் காதல் வருகிறது. அதற்கு சாயீஷா மறுப்பு தெரிவிக்க அவரை குறுக்கு வழியில் அடைய முயற்சிக்கிறார் லிஜீஷ்.

ஒரு பக்கம் சம்பத், ஒரு பக்கம் லிஜீஷ், இன்னொரு பக்கம் ஞாபக மறதி இம்மூன்றையும் சமாளித்து ஆர்யா எப்படி சாயீஷாவை கைப்பிடிக்கிறார் என்பதே மீதி கதை.

முழுக்க முழுக்க கமெடியோடு, எல்லோரும் பார்க்கிற மாதிரியான “U” செர்ட்டிஃபிகேட் படங்களையும் தன்னால் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்? சந்தோஷ் பி. ஜெயக்குமார். ஆனாலும், அங்கங்கே அவரது “டைரக்டோரியல் டச்” எட்டிப்பார்க்கத் தான் செய்கிறது. லாஜிக் என்பதை தூக்கி தூரமாக வைத்துவிட்டு, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த காமெடி தான் சரியானது என முடிவு செய்து கலகலப்பூட்டி இருக்கிறார்.

ஆர்யாவின் வழக்கமான கிரவுண்ட் என்பதால், ஜஸ்ட் லைக் தட் தூக்கி சாப்பிட்டிருக்கிறார். ஞாபக மறதியை பேலன்ஸ் செய்யுமிடங்கள் செம்ம கலாட்டா. கிளைமாக்ஸ் கட்சிக்கு முன்பு வரும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

லிஜீஷை வலுக்கட்டாயமாக வில்லனாக்க முயற்சி செய்தது போல இருந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கொடுக்கப்பட்ட வில்லத்தனத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஆள் ஹைட்டும், வெயிட்டுமாக பக்கா ஹீரோ மெட்டீரியலாக இருப்பதாலோ என்னவோ அவரது வில்லத்தனம் ஒட்டவில்லை. நீங்க ஹீரோவாக ட்ரை பண்ணுங்க லிஜீஷ்..

சாயீஷா.. கோலிவுட்டின் தற்போதைய ஹாட் சென்சேஷன். நடனத்தில் தெறிக்க விட்டிருக்கிறார். பாடல்களில் ஒன்று கூட தேறாவிட்டாலும், இவருக்காக வைத்த கண் வாங்காமல் ஸ்கிரீனை பார்த்துக்கொண்டே இருக்கலாம், அம்புட்டு அழகு. நடிப்பிலும் குறை சொல்ல ஏதும் இல்லாததால் நிச்சயம், இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு இவரது கொடி கோலிவுட்டில் பட்டொளி வீசி பறக்கும்.

மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், சதீஸ் ஆகியோரது காமெடி கைகொடுத்திருக்கிறது. மூவரில் சதீஸ் இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்கிறார்.

ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு ஜாலியாக தியேட்டருக்கு சென்று கவலைகளை மறக்க உதவும் இந்த “கஜினிகாந்த்”..