Search
Tuesday 16 October 2018
  • :
  • :

அருவி – விமர்சனம்!

மலைமுகட்டின் மேலிருந்து பிரவாகமெடுக்கிற நீர்த்திரள்கள் இணைந்து இருப்பிடம் தேடி சரிந்து விழும். அது தான் அருவியின் ஆரம்பம்!. அத்தோடு நின்றுவிடுவதில்லை அந்த அருவி. அது பயணிக்கிற இடமெல்லாம் பசுமையை இரைத்துப் போகிறது, தன் ஈரம் மிச்சமிருக்கிற கடைசி தடம் வரையிலும்.

அப்படித் தான் இந்த அருவியும் உணர்வுகளின் திரளாய், தான் பயணிக்கிற இடமெங்கிலும் அன்பை விதைத்துப் போகிறாள். உயிர் வாழ்கிற கடைசி நொடி வரையிலும்!

பொதுவாகவே இந்த சமூகம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து எப்போதுமே விவாதிக்க விரும்புதில்லை. அதேபோல தான் திருநங்கைகள் குறித்தும், சாதிய கட்டமைப்பு குறித்தும் விவாதிப்பதை குற்றச்செயல் போலவே நிறுவி வைத்திருக்கிறது.

மூன்றாம் பாலினத்தவரை அலிகள் என்றும், அரவாணிகள் என்றும், ஒம்போது என்றும் அழைத்த சமூகம் இன்று திருநங்கை, திருநம்பி என்று அழைக்கிறதே தவிர அவர்களுக்கான எந்த உரிமையையும் வழங்கி விடவில்லை. இவ்வளவு ஏன், அவர்களுக்கென்று ஒரு தனிக்கழிப்பறை கூட கட்டித்தரப்படவில்லை இங்கே.

நாம் வாழும் இந்த சமூகத்தில் பெண்களின் இருப்பு என்பதே பல கேள்விகளுட்பட்டது தான். அதிலும் ஒரு பெண் தனித்து விடப்படும் பொழுது அவள் எல்லோரையும் போலான ஒரு சாதாரணமான வாழ்வை வாழ இந்த சமூகம் அனுமதிக்கிறதா? என்பதும், அவள் எதனால் தனித்து விடப்படுகிறாள் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியது. இந்த சமூகம் குடும்ப அமைப்பைக் காரணம் காட்டி பெண்கள் மீது திணித்து வைத்திருக்கிற ஏராளமான சுமைகளை “அருவி” தூக்கி எறியும் படி அழைத்திருக்கிறாள்.

எப்போதுமே இந்த சமூகம் தனித்து விடப்படுகிற பெண்களின் மீது பழி சொல்வதற்கும், பாவம் சுமத்துவதற்கு காரணம் தேடிக்கொண்டே இருக்கும்.

அப்படி தனித்துவிடப்படுகிற “அருவி” என்கிற பெண்ணின் வழியே இந்த சமூகத்தின் அத்தனை அவலங்களையும் பகடி பேசுகிற இந்தத் திரைப்படம் நிச்சயமாய் தமிழ் ரசிகர்கள் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்று.

பொதுவாகவே எந்த ஒரு திரைப்படமும் நம்மை அடியோடு சாய்த்துவிடுவதில்லை. அது சொல்லும் கதை நமக்கோ, நம் பக்கத்தில் இருப்பவர்கள் யாருக்காவதோ நடந்திருக்கும் பட்சத்தில் அல்லது நடந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் அதனோடு பயணிக்கிறோம். நம்மை இழக்கிறோம். கொஞ்சம் அழுகிறோம்.

கண்டிப்பாக இந்த அருவி, உங்களின் ஒரு சொட்டுக் கண்ணீரையாவது பரிசாய்க் கேட்பாள், தயங்காமல் தந்துவிட்டு வாருங்கள்.

படத்தின் ஒரு பகுதி, ஒரு தொலைக்காட்சி படப்பிடிப்பு கூடத்திற்குள் நகரும். அங்கே நிகழ்கிற ஒவ்வொன்றும் இந்த சமூகத்தில் நிகழ்கிற அவலங்களை பதிவு செய்து கடந்து போகும். அதிலும் அந்த “பணியாரக் கிழவி”யின் கதை, இதயத்தின் உள்ளிருந்து கொத்தோடு உணர்வுகளை பிடுங்கிக் கொண்டு போகும். அந்த கதை சொல்லி, “களத்து தோசை”யோடு அந்த பணியாரக் கிழவியின் ஈமச்சடங்கை ஒப்பிட்டு குலுங்கி அழும்போது, நம்மாலும் அழுகையை அடக்க முடியவில்லை.

யாரையும் கொச்சைப்படுத்தாமல், எந்த உறவுகளையும் அவதிக்காமல் இப்படி ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படம், தமிழ் சினிமாவில் எப்போதாவது மட்டுமே பூக்கும். ” அருவி” ஒரு குறிஞ்சி மலர்.

தான் ஏற்று நடிக்கிற கதாபாத்திரத்திற்காக அந்த நடிகர் அதை செய்தார், இந்த நடிகர் இதை செய்தார் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி எந்தவிதமான முன் விளம்பரமும் இல்லாமல் இந்தப்படத்தில் தான் ஏற்று நடித்தருக்கிற கதாபாத்திரத்திற்காக ஒரு நாயகி தன்னை இவ்வளவு வருத்திக் கொள்வாரா? என ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார் அதிதி பாலன். எத்தனை முகபாவங்கள்! எத்தனை நேர்த்தி! அறிமுக நாயகியா இவர்? தமிழ் சினிமா அதிதியை கொண்டாட என்றென்றும் “அருவி” மட்டும் போதும்.

“எமிலி”யாக நடித்திருக்கும் அஞ்சலி வரதன், ஒரு நம்பிக்கை முகம். அவரை மூன்றாம் பாலினத்தவராகவே பார்த்து ஒதுக்கி விடாமல், பல நல்ல கதாபாத்திரங்களில் பயன்படுத்த தமிழ் சினிமா முன்வர வேண்டும். அவரின் முதிர்ந்த நடிப்பை புறந்தள்ளி விட்டு அருவியை புகழ்வது முடியாத காரியம். தன்னை சக மனித உயிராய் பார்க்க வேண்டுகிற எமிலி, அருவிக்கு ஒரு தூண் தான்.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் கொண்டாடப்பட வேண்டியவர்களே. தனித்தனியாக ஒவ்வொருவரைப் பற்றியும் பேச அவ்வளவு இருக்கிறது. அந்த சீரியல் இயக்குநர், உதவி இயக்குநர், ஆஃபீஸ் பையன், வாட்ச்மேன் தாத்தா, நிகழ்ச்சி தொகுப்பாளினி என அததனை பேருமே தங்களின் இருப்பை ஆணித்தரமாக பதிவு செய்து கொள்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒவ்வொரு காட்சியிலும் கையாண்டிருக்கிற கேமரா கோணங்களால், புதிய அனுபவத்தை தந்திருக்கிறார். அதிலும் “அருவி” சிறுமியாக இருக்கும் போது பட்டாசு வெடிக்கும் ஒரு காட்சியில் அவர் பயன்படுத்திருக்கும் “லைட்டிங்” அபாரம். இசையமைப்பாளர்கள் பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் ஆகியோர் படத்தின் இயல்பை சிதைத்து விடாமால் கதையின் போக்குடனே பயணித்திருப்பது நிச்சயமாய் பாராட்டப்பட வேண்டியதே.

இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், பாலு மாகேந்திராவின் வார்ப்பு. கதை சொல்லும் விதத்தில் புதிய பரிமாணத்தை அழைத்து வந்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் கத்தி வீசுகிறது. அதிலும் “அருவி” இந்த சமூகக் கட்டமைப்பை குறித்தும், முதலாளித்துவ சுரண்டல் குறித்தும் பேசுகிற நீண்ட வசனம் உச்சி மண்டையில் சம்மட்டி இறக்குகிறது. நாயகர்களுக்கு தன்னை சமரசம் செய்துகொண்டு தடம் மாறாமல் தன் குருநாதர் போல இந்த சமூகத்தையும், உறவுகளுக்கிடையிலான உணர்வுச் சிக்கல்களையும் படம்பிடிக்க வேண்டும்.

இந்தக் கதையை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சரியாக கணித்து, முழுமையான நம்பிக்கையோடு தயாரித்த “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கு நன்றியும், வாழ்த்தும். ஜோக்கர் படத்தைப் போலவே அருவியும் முழுமையாக இந்த சமூகத்திற்கான படம் என்னும் வகையில் ஆயுள் பெருமைக்கு சொந்தக்காரர்கள் ஆகிறார்கள்.

“அருவிக்குண்டான மன முதிர்ச்சியும், மன்னிக்கும் பெருந்தன்மையும் இந்த சமூகத்திற்கு வந்துவிடும் பட்சத்தில் உலகமே அன்பால் நிறைந்து வழியும்”!