Search
Tuesday 16 October 2018
  • :
  • :

அறம் – விமர்சனம்!

எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் துன்பியலை உதாசீனப்படுத்தியும் ஊனப்படுத்தியுமே பழக்கப்பட்ட சினிமாவில், அச்சீழ்பிடித்த பழக்கத்தை இடக்கையால் புறந்தள்ளி விட்டு எப்போதாவது ஒருசில சினிமா மட்டுமே கேட்பாரற்ற எளிய மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கான ‘அறம்’ பேசும். அதிகார வர்க்கமும், ஆளும் வர்க்கமும் மக்களுக்கெதிராக எப்படி வளர்ந்து நிற்கிறதென்பதை மேம்போக்காக சொல்லிக் கடந்து போகாமல், தனித்தனி செங்கலாகப் பிரித்து தைரியமாகக் கைநீட்டிச் சாட இதுபோல் இன்னும் நூறு ‘அறம்’ தேவைப்படுகிறது நமக்கு. ஒரு நாட்டின் அரசாங்கம், தனது ஒட்டுமொத்த மக்களுக்குமானதாக இல்லாமல் யாரோ சிலருக்காக மட்டுமே வேலை செய்து கொண்டிருப்பதை வெளிச்சம் போட, அதுவும் அதைத் திரைவழியேப் பேச ஆகப்பெரிய துணிச்சலும் மக்கள் மீதான அதீத அக்கறையும் வேண்டும். அந்த துணிச்சலும், மக்கள் மீதான அன்பும் அக்கறையும் கொண்ட இயக்குநர் கோபி நயினார் மிகத் தூய்மையானதொரு அரசியலைப் பேசியிருக்கிறார் ‘அறம்’ வழியாக.

ஆயிரம் கைகள் ஏதேனும் ஒரு கையாவது உதவி செய்யாதா? என்ற தேடலோடு மேல்நோக்கி நீட்டிக் கொண்டிருக்கையில், ஒரு கை மேலிருந்து வந்து தவித்த அந்த ஆயிரம் கைகளோடு இணையும் போது ‘அறம்’ என்று பெயர் விழுகிறது. இப்படித் தானே பலகோடி மக்கள் நாடெங்கிலும் தங்களைத் தூக்கிவிட ஒரு கரம் நீளாதா? என ஏங்கிக் கிடக்கிறார்கள். படம் தொடங்குகிற எழுத்திலிருந்து முடியும் இறுதிக்காட்சி வரை முழுமையானதொரு மக்களுக்கான படம் இந்த ‘அறம்’.

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் இடம், கல்வி, மருத்துவம் என இவற்றின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு தரப்பட்ட இந்தியாவில் தான் நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த இரண்டு வெவ்வேறு இந்தியாவை ராக்கெட் விட்டு பெருமை பீற்றும் இந்தியா ஒன்றாகவும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றக் கூட வக்கற்ற இந்தியா இன்னொன்றாகவும் பிரித்து வைத்து இந்த தேசத்தின் பொய்யான வளர்ச்சியின் மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். நிச்சயமாக இது மிகப்பெரிய விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது தான். இதே ராக்கெட் விட கோடி கோடியாக செலவு செய்யும் நாட்டில் மலக்குழிக்குள் இறங்கி மரணித்துப் போகிற இந்திய ஜனநாயக நாட்டின் குடிமகன்களுக்கும் என்ன செய்திருக்கிறது இந்த அரசு?. அந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கையுறை கூட ஒழுங்காக வழங்கத் திராணியில்லையே நம் அரசுகளுக்கு?

இந்தப் படம் மூடப்படாத ஒரு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விடுகிற விளிம்புநிலை மனிதனின் குழந்தையை மீட்க ஒரு மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் போராட்டம். அந்தப் போராட்டத்தின் ஊடே இந்த தேசத்தின் விளிம்புநிலையில், வெறும் வாக்குகளாக மட்டுமே மதிக்கப்படக் கூடிய மக்கள் மீது நம் அரசுகளும், அதிகாரிகளும் எந்த மாதிரியான மரியாதையை வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மையை இதைவிட யாரவது நேர்மையாக சொல்லிவிட முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி.

அந்தக் குழந்தை ஆழ்துளைக் குழியில் முகம் மட்டுமேத் தெரியுமளவிற்கு நூறடி ஆழத்தில் இருப்பதைக் காண்பிக்கிற ஒவ்வொரு காட்சியிலும் விழியோரங்களில் கசியும் கண்ணீர் துளிகள் தான் நமக்குள் எஞ்சியிருக்கிற மனிதத்திற்கான சாட்சி. அதேபோல் அந்தக் குழந்தை வெளியே எடுக்கப்படும் அந்த நிமிடத்தில் நாமும் சேர்ந்து நெகிழ்வதும் நம்மை நாம் இழந்து, திரையில் இருக்கிற கூட்டத்தில் ஒருவராகிப் போகிறோம்.

கொஞ்சம் பிசகினாலும் ஒரு ஆவணப் படமாகிப் போகக் கூடிய கதையை திரக்கதையினாலும், அழுத்தமான வசனங்களாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறார் கோபி. நயன்தாராவிற்கு இருக்கிற அந்த லேடி சூப்பர் ஸ்டார் பிம்பம் மிகப்பெரிய பலமாகி இருக்கிறது. நயன்தாரா, சுனுலக்‌ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் உட்பட திரையின் உள்ளிருக்கும் அத்தனை பேரும் நம்மை வென்றெடுக்கிறார்கள். ஓம் பிரகாஷின் கேமரா கோணங்களுக்கும் பேசத் தெரிந்திருக்கிறது இந்த படத்தில். ரூபனின் படத்தொகுப்பில் இந்த ‘அறம்’ நிச்சயமாக ஒரு பொக்கிஷம்.

குறிப்பிட்டு சொல்ல வெண்டியது ஜிப்ரான். காட்சிகளை செவி வழியேயும் கடத்தலாம் என்பதை அத்தனை அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார் ஜிப்ரான். ‘வாகை சூட வா’ படத்தில் செய்த மாயங்களைக் காட்டிலும் இதில் ஜிப்ரான் நம்மை அழ வைக்கிறார். உமாதேவியின் வரிகளில் ‘புது வரலாறே.. புற நானூறே’ பாடல் ஒலிக்கும் போதெல்லாம் சிலிர்ப்பைத் தந்து போகிறது.

காசு பணம் சம்பாதிக்கிறதுக்கு நம்ம புள்ளைய படிக்க சொல்லல, படிச்சா மரியாதை கிடைக்குமேன்னு தான்.. இந்த நாட்டுல நம்மல மாதிரி ஆளுங்களோட புள்ளைகள எல்லாம் விளையாட விட மாட்டானுங்கடி..

அவனுங்ககிட்ட கயித்தத் தவிற ஒன்னுமே இல்லடா.. நம்ம புள்ளைய நாமதாண்டா காப்பாத்தனும்..

இந்த நாட்ல ஒரு பெண் கலெக்டராகிறது பெரிய விசயமில்லை…ஆனா அவ பெண்ணாகவே அத்தனை ஆண்களுக்கு மத்தியில் வாழ்றது எவ்வளவு கஷ்டமுனு நான் கலெக்டரானதுக்கப்புறம் தெரிஞ்சுகிட்டேன்….

தன்சிகா உயிர் பிழைக்கிறது அவசியம்…அப்பதான இந்த தேசம் எவ்வளவு அவமானங்களை சுமந்துகிட்டு இருக்குதுன்னு தெரியும்….

மக்கள் தங்கள் தேவைகளுக்கு அதிகாரிகளை தேடி வர்றாங்க…ஆனா ஓட்டுப்போட்டு அரசியல்வாதிங்க்கிட்ட அதிகாரத்தை குடுத்திடறாங்க…

மக்களை ஏமாற்றி ஊரை கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க முதல்ல மூடப்படவேண்டிய சாக்கடைகள்…

மக்களை எப்பவும் நான் குற்றம் சொல்ல மாட்டேன்..அவங்களை அறியாமையிலேயே வெச்சிருக்கிறது குற்றமில்லையா?

என்பதாக படம் நெடுக தெறிக்கும் வசனங்கள் எல்லாமே சவுக்கு ரகம்!

இறுதியாக அந்தக் குழந்தையை, இன்னொரு குழந்தையை மீட்கும்  அதே நேரத்தில் இந்தியாவின் ராக்கெட் ஒன்று விண்ணில் சீறிப்பாயும். அதுதான் நமது இந்தியா. அதைத்தான் இந்த ‘அறம்’ கேள்விக்குள்ளாக்குகிறது.