Search
Wednesday 20 March 2019
  • :
  • :
Latest Update

“60 வயது மாநிறம்” – விமர்சனம்!!

“எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கருப்பு நாய், ஒரு வெள்ளை நாய் ஒளிந்திருக்கும்.. அவை நமக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்.. நாம் அந்த இரண்டில் எந்த நாய்க்கு அதிகமாக உணவளிக்கிறாயோ, அந்த நாய் வென்று நீயாக மாறும்”..

“நீ ஒரு விசயத்தை உண்மையாக நேசித்தால், அந்த விசயம் கிடைக்கிற வரை உறுதியாக போராட வேண்டும்”

“பெற்றவர்களோ, மற்றவர்களோ சக மனிதனிடத்தில் அன்பு செய்வதே மனித அடையாளம்”.. போன்றவற்றை அழகான கவிதை போல சொல்லி இருக்கும் படம் தான் இந்த “60 வயது மாநிறம்”.

போதுவாகவே ராதாமோகனின் திரைப்படங்கள், வழக்கமான தமிழ் சினிமா பாணியில் இருந்து சற்றே தள்ளி நிற்கக் கூடியவை. “பயணம்” தவிர ஏனைய திரைப்படங்கள் யாவும் பரபரப்பான திரைக்கதைக்குத் தொடர்பில்லாதவை. பார்வையாளனுக்கு எந்த நெருடலையும் ஏற்படுத்தாத கதையோட்டத்தினைக் கொண்டவை. நெகிழ்வதற்கும், அழுவதற்கும், சிரிப்பதற்கும் ஏராளனமானவை உள்ளே பொதிந்திருக்கும்.

அந்த வகையில் “60 வயது மாநிறம்” திரைப்படம் அவரின் “ட்ரேட்மார்க்” சினிமாவுடன், கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லரை சேர்த்து உருவாக்கப்பட்டதாக இதயம் ஆட்கொள்கிறது.

“அல்சீமர் டிசீஸ்” எனும் மறதி வியாதியால் பாதிக்கப்படுகிறார் பிரகாஷ் ராஜ். அவரது மகனான விக்ரம் பிரபு வேலைக்காக மும்பை செல்ல வேண்டிய சூழலில் அவரை ஒரு கேர் ஹோமில் சேர்க்கிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வந்து பிரகாஷ் ராஜை பார்க்கிறார். அப்படி ஒருமுறை வந்து, பிரகாஷ்ராஜை வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரகாஷ் ராஜ் காணாமல் போகிறார். அவரைத் தேடி விக்ரம் பிரபுவும், மருத்துவராகிய இந்துஜாவும் அலைகிறார்கள்.

இன்னொரு பக்கம், நிழல் உலக தாதாவின் அடியாளாக இருக்கும் சமுத்திரக்கனி, தனது முதலாளிக்கு இடைஞ்சலாக இருக்கும் அரசு அதிகாரியை கொலை செய்து ஒரு வேனில் வைத்துக் கொண்டு திரிகிறார். அப்போது வழியில் எதிர்பாராத விதமாக பிரகாஷ் ராஜ் அந்த வண்டியில் ஏறிவிடுகிறார்.

பழையன எதுவுமே நினைவில் இல்லாத நிலையில் இருக்கும் பிரகாஷ் ராஜை, சமுத்திரகனி என்ன செய்கிறார்? விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜை கண்டு பிடித்தாரா? என்பதை தனது வழக்கமான ஸ்டைலில் படமாக்கி இருக்கிறார் ராதாமோகன்.

படத்தின் மூன்று தூண்கள் பிரகாஷ் ராஜ், இளையராஜா, விஜி மூவரும் தான். பிரகாஷ் ராஜ் எதற்குமே தன்னை தயாராக வைத்திருக்கக் கூடிய ஒரு நடிப்பு அரக்கன். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஆட்கொள்கிறார். நினைவுகளைத் தொலைத்துவிட்ட, முதிர்வடைந்த ஒரு மனிதனாக இத்தனை இயல்பாய் வேறு எவராலும் நடித்திருக்க முடியுமா? என்பது கேள்விக் குறிதான்.

இளையராஜா.. இளையராஜா.. இளையராஜா!! பின்னணி இசைக்கு இனி “இளையராஜா” இசை என பெயர் வைத்து விடலாம் பேசாமல். “தேடி தேடி” பாடல் டிஜிட்டல் இசைச் சித்ரவதைகளுக்கு நடுவே வந்திருக்கும் ஒரு மயிலிறகு.

ராதாமோகனின் படங்களின் பலமே வசனங்கள் தான். இந்தப் படமும் அந்த பெருமையை தக்க வைத்து கொள்கிறது. அதற்குக் காரணம் வசனகர்த்தா விஜி.

“வித விதமா பேய் படமா எடுத்து, இப்ப எல்லாம் எவனுமே பேய்க்கு பயப்படுறதே இல்ல.. குழந்தைங்க கூட பொம்மை சேனல் பாக்குறதுக்கு பதிலா பேய்ப்படம் தான் பாக்குதுங்க”.

“நம்ம பி.எம் 500, 1000 ரூபா நோட்டு எல்லாம் செல்லாதுனு நடுராத்திரில சொன்னப்ப.. நானெல்லாம் சிரிச்சுட்டே தான் இருந்தேன். ஏன்னா என்கிட்ட ரெண்டு 100 ரூபா நோட்டு மட்டும் தான் இருந்துச்சு”

“நீங்க எல்லாம் காணாமல் போன ஒருத்தரைத் தேடுறீங்க.. நான் ஒருத்தரைத் தொலைச்சிட்டு தேடுறேன்”

“போன முறை குடிச்சப்போ, ஒருத்தன் கிட்ட GST-யை பத்தி ஒரு மணி நேரம் பேசியிருப்பேன்.. கடைசி வரை அவனுக்குப் புரியவே இல்ல” என படம் நெடுகிலும் கலக்கல் வசனங்கள் கலகலப்பூட்டி கைதட்டுகள் வாங்குகின்றன.

“விஜய் டிவி” ஷரத், வாட் எ பெர்ஃபாமன்ஸ் மேன்! காமெடி + உணர்வுப் பூர்வமான நடிப்பு என கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். குமரவேலுவும் தனது முத்திரையை பதிக்கிறார். விக்ரம் பிரபு ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார். ஆனால் சில இடங்களில் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. ஹீரோயின், இந்துஜா..

“60 வயது மாநிறம்” – அன்பினால் நிறைந்து!!